பீகார் மாநிலத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 'வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேரை தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. நாடு முழுவதும் இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 'வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து, பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது' என குற்றம் சாட்டி, பீகாரில், கடந்த 17ஆம் தேதி முதல், ராகுல்காந்தி பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.இதில் பங்கேற்கும்படி, 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. இதை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில், பாட்னா புறப்பட்டு சென்றார்.பீகார் மாநிலத்தில், ராகுல்காந்தி மேற்கொள்ளும் இன்றைய நடைபயணத்தில் பங்கேற்றார்.