வேலை தேடி, ரஷ்யா சென்ற தன்னை உக்ரைன் போரில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதாக, ஐதராபாத்தை சேர்ந்த நபர் அந்நாட்டில் இருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த முகமது அகமது என்பவர், தன்னுடன் பயிற்சி பெற்ற 25 பேரில், ஒரு இந்தியர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தான் இருக்கும் இடத்தில், போர் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்த முகமது அகமது, அதில் சண்டையிட தான் மறுத்தால், கழுத்தில் துப்பாக்கியை வைத்து, தன்னைச் சுட்டு, டிரோன் மூலம் தான் கொல்லப்பட்டது போல் அரங்கேற்றுவோம் என ரஷ்யர்கள் மிரட்டுவதாக, வேதனை தெரிவித்தார்.இதுதொடர்பாக, அகமதுவின் மனைவி, வெளியுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதி உள்ள கடிதத்தில், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமது கணவரை மீட்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், ரஷ்யாவில் சிக்கி உள்ள அகமதுவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓவைசி எம்பி வலியுறுத்தி உள்ளார்.