தமிழ் திரையுலகின் மறக்க முடியாத குணச்சித்திர நடிகை 'ஆச்சி' மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி காலமானார். கூர்மையான கண்கள், நவரசத்தையும் வெளிப்படுத்தக்கூடிய முக பாவனை மற்றும் எதார்த்தமான நடிப்பு மூலம் பெயர் பெற்றவர், பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்றால் அது மனோரமா. சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்தார். மேடை நாடகங்களில் தொடங்கிய இவரது பயணம், பின்னர் வெள்ளித்திரையில் மிளிர்ந்தது. காமெடி, சென்டிமெண்ட், வில்லி, என எந்த ரோல் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் தனித்திறமை கொண்டவர். சினிமா வாழ்க்கையில் இவர் வெற்றியால் மகிழ்ந்து இருந்தாலும், அவரது திருமண வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மனோரமா, ராமநாதன் என்பவரை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இரண்டே வருடத்தில் கணவரை விட்டு பிரிந்தார். அப்போது, அவரின் மகன் பூபதி, பச்சிளம் பாலகன். தன்னுடைய மகனை, கதாநாயகனாக பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட மனோரமாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘மணல் கயிறு’, ‘ராணி தேனீ’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் பூபதி நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெற்றியடைய தவறிவிட்டது. மகனுக்காக 'தூரத்து பச்சை’ என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால், அது எடுபடவில்லை. இதற்கு காரணம் பூபதிக்கு இருந்த அதீத மது பழக்கம் தான். இதுவே இவரது திரையுலக வாழ்க்கையில் தோல்வியை தழுவ வைத்து. இவரது சினிமா வாழ்க்கை கலை உலகின் கானல் நீராக மாறிப்போனது. மது பழக்கத்துக்கு முற்றிலும் அடிமையான இவர், கடந்த 2020 ஏப்ரல் மாதம், கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபானம் கிடைக்காத நிலை ஏற்பட்ட போது, தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டது. கடந்த சில வருடங்களாவே உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த பூபதி, தன்னுடைய 70ஆவது வயதில், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். பூபதியின் மறைவு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ்த் திரையுலகின் முடிசூடா ராணியாக வலம் வந்த ஆச்சி மனோரமாவின் மகன் பூபதி, திரைவானில் ஜொலிக்க முடியாமலேயே மறைந்து விட்டார்.