அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.மேலும், 'குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சனிக்கிழமை (அக்.18) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்’ எனக் கூறியுள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூரில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.