சேலத்தில் டீக்கடை என்ற பெயரில் இரவு பகலாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதை நியூஸ் தமிழ் செய்திக்குழு அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே இதே புகாரில் கைது செய்யப்பட்டு வெளிவந்த நபர் மீண்டும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை, கெடுத்து குட்டி சுவராக்கும் லாட்டரி விற்பனையை, தமிழக அரசு தடை செய்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பல இடங்களில் லாட்டரி விற்பனை தாராளமாக நடைபெறுவதற்கு இந்த காட்சிகளே சாட்சி... சேலம் புது ரோடு பகுதியில் டீக்கடை ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பதாக வந்த தகவலை அடுத்து செய்தியாளர் சிலம்பரசன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சிவா காபி பார் என்ற கடையில் மட்டும் அதிகளவிலான கூட்டம் இருந்ததை கண்டு சந்தேகமடைந்தார். இதையடுத்து அவரும் அங்கு சென்று பாரத்தபோது லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரிய வரவே 80 ரூபாய்க்கு லாட்டரி சீட்டுகளை வாங்கிவிட்டு திரும்பிவிட்டார்.இது தொடர்பாக லாட்டரி வாங்கிய முதியவரிடம் நமது செய்தியாளர் பேசிய போது, தினமும் தான் வாங்கும் கூலித்தொகை 300 ரூபாயில் தினமும் 80 ரூபாயை லாட்டரிக்கு செலவிடுவதாகவும், மீதியை குவாட்டருக்கு செலவிடுவதாகவும் கூறினார். மறுநாளில், ஒளிப்பதிவாளருடன் சென்ற செய்தியாளர் சிலம்பரசன் அதிரடியாக காபி பாருக்குள் புகுந்து லாட்டரி சீட்டு விற்பனையை அம்பலப்படுத்தினார். நேற்று வாடிக்கையாளராக வந்தவர் இன்று மைக்கும் கையுமாக வந்துவிட்டாரே என்ற அதிர்ச்சியில் லாட்டரி பெண் விற்பனையாளர் சங்கீதா பதறிப்போய் அண்ணா, அண்ணா என கெஞ்ச தொடங்கினார்.மக்கள் வாங்கிய லாட்டரி எண்களை பட்டியலிட்டு வைத்திருந்ததையும், விற்பனைக்காக வைத்திருந்த துண்டு சீட்டுகளையும் செய்தியாளர் காட்சிப்படுத்தியதோடு, ஏற்கனவே லாட்டரி வழக்கில் கைதான பாரதி என்பவரே மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவதையும் உறுதிப்படுத்தினார். மேலும், அருகிலிருக்கும் வீட்டில் வைத்தும் லாட்டரி விற்பனை நடைபெறுவதும் வெளிச்சத்துக்கு வந்தது.பாரதியும் அவரது தம்பி சிவராமனும் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கவே திணறினர். தனது அக்கா சங்கீதா, கடையில் அமர்ந்து கணக்கு மட்டுமே எழுதியதாகவும், அது லாட்டரி கணக்கு இல்லை என்றும் தம்பி சப்பைகட்டு கட்டினார்.அனுதினமும் மதியம் 3 மணிக்கு லாட்டரிகள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அது முடிந்த உடனேயே இந்த கும்பல் விற்பனையை தொடங்கி விடுவதாக கூறப்படுகிறது. மேலும், அசாம் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் BODOLAND லாட்டரிகளை வாங்கி அதிக விலைக்கு இந்த கும்பல் விற்பனை செய்து வருவதாகவும் தெரிகிறது. குறைந்தபட்சம் 80 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுத்து நம்பர் எழுதிக் கொள்ளலாம் என்பதால் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதனிடையே பாரதி மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிவா காபி பாருக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.