கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த நான்கு இளைஞர்கள், மசாஜ் செண்டர் பெண் ஊழியர்களிடம் அத்துமீறி, ஆடைகளை கிழித்து கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. ஆசைக்கு இணங்க மறுத்த பெண்களை, பட்டப்பகலில் சாலையிலேயே துரத்தி துரத்தி வீடியோ எடுத்து மிருகத்தனமாக நடந்து கொண்ட இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது.தினந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே மசாஜ் செண்டர் இயங்கி வருகிறது. முறையான உரிமம் பெற்று, சான்றிதழுடன் இயங்கி வரும் இந்த மசாஜ் செண்டருக்கு சென்னையில் இருந்து நான்கு இளைஞர்கள் வந்ததாக கூறப்படுகிறது. என்னென்ன மசாஜ் சேவை வழங்கப்படுகிறது என விசாரித்த இளைஞர்கள், பாலியல் ரீதியான தேவைக்கும் இணங்க வேண்டும் என டிமாண்ட் செய்ததாக கூறப்படுகிறது. உரிமம் பெற்று இயங்கி வரும் மசாஜ் செண்டரில் அந்த மாதிரி விஷயமெல்லாம் நடப்பதில்லை என உரிமையாளர் கூறிய போதும், ரிப்போர்ட்டர், வக்கீல், போலீஸ் என நான்கு பேரில் ஆளுக்கொரு வேலையை சொல்லி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.