புதுச்சேரியில் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அப்போது பேசிய அவர் ”வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை மட்டும் அளிக்கப்படும் இந்த சாதி சான்றிதழ் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வருவது தவிர்க்கப்படும்.மேலும் 10, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே நிரந்தர சாதி சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசல் குறைந்து செயல்திறன் அதிகரிக்கும்” என்று கூறினார்.மேலும் அவர், “புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை செய்வதற்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. குடிசை வீடுகளுக்கு 8000 ரூபாயும், பகுதி சேதமடைந்த கல் வீடுகளுக்கு 6,500 ரூபாயும், பகுதி சேதமடைந்த ஓட்டு வீட்டுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்படும். இதற்காக 33 லட்சத்து 78 ஆயிரத்து 500 ரூபாய் அரசுக்கு செலவு ஆகும்” என அறிவித்துள்ளார்.