உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். “சரணம் ஐயப்பா, சுவாமி சரணம் ஐயப்பா” என இருமுடி தாங்கி பக்தர்கள் வழிபாடு செய்யும் நேரத்தில், ஐயப்பனின் சன்னதிக்கு அருகே செயல்பட்டு வரும் பிரத்யேக தபால் நிலையம் தொடர்பான தகவலை பார்க்கலாம். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்வோர், இருமுடி கட்டி விரதமிருந்து நெடும் யாத்திரைக்கு பிறகு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். எனினும், சபரிமலை சன்னிதானத்தில் அமைந்திருக்கும் தபால் நிலையம், கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கான திறவுகோலாக இருக்கிறது. சபரிமலை சன்னிதானம் அருகே அமைந்துள்ள மாளிகைபுரம் கோயில் வளாகத்தில் தபால் நிலையம் அமைந்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் இந்த தபால் நிலையமும் திறக்கப்படுகிறது. ஐயப்பனை நேரடியாக வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒருபுறம் என்றால், ஐயனுக்கு பக்தர்கள் பலரும் கடிதம் எழுதி அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குடும்ப கஷ்டம் நீங்க, வேண்டுதல்கள், வாழ்வில் இருக்கும் துயரை களைய என பல கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை பக்தர்கள் இந்த தபால் நிலையத்திற்கு அனுப்புகின்றனர். ஐயப்ப சாமியே இந்த கடிதங்களை பிரித்து படித்து தங்களது குறைகளை தீர்த்து வைப்பார், வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு சாரார் கஷ்டங்களை எழுதி அனுப்புகிறார்கள் எனிலும், மேலும் பலரோ தங்களது காணிக்கைகளை இந்த கடிதம் மூலமாக அனுப்பி வைக்கின்றனர். ஐயப்ப சன்னதியை சென்றடையும் கடிதங்கள், சாமியின் கரங்களுக்கே சென்றடைவதாக பக்தர்கள் நம்பும் வேளையில், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பலரும் அங்கிருந்து இந்த தபால் நிலையம் மூலமாக வீட்டிற்கு கடிதங்களை அனுப்புகின்றனர். கடந்த 1963ஆம் ஆண்டு முதலே சபரிமலையில் இந்த தபால் நிலையம் செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பிரத்யேகமாக ஐயப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரையும் குத்தப்பட்டு கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகிறது இந்த முத்திரை கொண்ட கடிதங்கள் தங்கள் வீட்டிற்கு வருவதை பக்தர்களும் புண்ணியமாக கருதுகின்றனர். 1974ஆம் ஆண்டு இந்த முத்திரை வெளியிடப்பட்ட நிலையில், நாட்டில் வேறு எந்த தபால் நிலையத்திலும் இதுபோன்ற தனி முத்திரை பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்து ஐயப்பனின் சன்னிதான நடை அடைக்கப்பட்ட பிறகு இந்த சிறப்பு முத்திரையானது பத்தனம்திட்டா தலைமை அஞ்சலகத்தின் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. தொடர்ந்து, லாக்கரில் வைத்து பூட்டப்பட்டு பாதுகாக்கப்படும் நிலையில், 62 நாட்களுக்குப் பிறகு இந்த அஞ்சல் குறியீட்டு எண் செயலிழப்பு செய்யப்படுகிறது. மீண்டும் அடுத்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலம் தொடங்கியவுடன், இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டு சேவை மீண்டும் தொடங்குகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயமே, வரும் கடிதங்கள் பாதுகாக்கப்படுவதோடு, பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லும் போதும் தலைச்சுமையாக கொண்டு செல்லப்படுகிறது.