பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணத்தால், தான் ஒரு உண்மையான அதிமுக தொண்டர் என்பதை நிரூபித்துள்ளார் செங்கோட்டையன் என்றும், தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் சசிகலா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்ட அறிக்கை:அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால், வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் பேரியக்கம். ஜெயலலிதா கூறியது போல, இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு பேரியக்கம் என்பதை அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார்.அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்து தான், இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து, தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.செங்கோட்டையனை போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் எண்ணம் ஈடேறாது. திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இதை யாராலும் தடுக்க முடியாது.இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது. எந்த தடை வந்தாலும், அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி மீண்டும் அதே மிடுக்கோடு அதிமுக மிளிரும். ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார். இதையும் கேளுங்கள்; திடீர் என்ட்ரி கொடுத்த சசிகலா.. அதிர்வை கிளப்பிய அறிக்கை | AIADMK | Sengottaiyan | Sasikala