நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டதாக இபிஎஸ் குற்றச்சாட்டு முன் வைத்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம் என அமைச்சர் சக்கரபாணி கூறி உள்ளார். விவசாய வளர்ச்சி - இபிஎஸ் விமர்சனம்;அதிமுக ஆட்சிக் காலத்தில் 4.5% ஆக இருந்த விவசாய வளர்ச்சியை 0.09% ஆக படுபாதாளத்தில் தள்ளியது தான் திமுக அரசின் சாதனை என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் தாம் ஆய்வு செய்தபோது மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து போனதாக கூறி பெண் விவசாயி ஒருவர், கண்ணீர் விட்டு கதறியது கலங்க செய்ததாகவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நீண்ட குற்றச்சாட்டை தமது சமூக வலை தள பக்கத்தில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசு தான் காரணம்;அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில், நெல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பான எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விளக்கம்;நெல்லில் கலக்க வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு பொய்யான தகவலை கூறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இபிஎஸ் ஆதாரம் தர முடியுமா? - அமைச்சர் சக்கரபாணி;செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என ஆதாரத்துடன் சொல்வதாக இபிஎஸ்-க்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலடி கொடுத்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனுமதி வழங்கி விட்டதாக சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரம் தர முடியுமா? என்றும் சவால் விடுத்துள்ளார்.