திண்டுக்கல் அருகே கடந்த வாரம் பிரபல ரவுடியை பழிக்குப்பழியாக வெட்டி சாய்த்த 4 பேரை கைது செய்த போலீசார், கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஒரு கொலையாளியை மயானத்திற்கு அழைத்து சென்றனர். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் ஒருவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை, காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 24 வயதான பிரபல ரவுடி முகமது இர்ஃபான் கடந்த வாரம் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரையும் அவரது நண்பரான முகமது அப்துல்லாவையும் அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்து கிடந்த முகமது இர்பானின் சடலத்தை மீட்ட போலீசார், அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மற்றொரு ரவுடியான முகமது அப்துல்லாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.முகமது இர்பானும், முகமது அப்துல்லாவும் திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பதால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றகோணத்தில் விசாரணையில் இறங்கிய போலீசார், திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த எடிசன் சக்கரவர்த்தி, ரிச்சர்ட் சச்சின், மார்ட்டின் நித்திஷ், பிரவீன் லாரன்ஸ் ஆகிய 4 பேரை கொத்தாக கைது செய்தனர். தொடர்ந்து 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கொலையில் தொடர்புடைய சைமன் செபாஸ்டின், எடிசன் ராஜ் ஆகிய இருவரும் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் கொலையின்போது அணிந்திருந்த உடைகள் ஆகியவற்றை மாலைப்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் மறைத்து வைத்திருப்பதாக ரிச்சர்ட் சச்சின் கூறினார். இதையடுத்து அவற்றை கைப்பற்றுவதற்காக மயானத்திற்கு அழைத்து சென்றபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் அருண் பிரசாத்தை வெட்டினார் ரிச்சர் சச்சின். அப்போது அருண் பிரசாத்தை காப்பாற்றுவதற்காக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். இதில் சுருண்டு கீழே விழுந்த ரிச்சட் சச்சின் மற்றும் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த காவலர் அருண் பிரசாத் ஆகிய இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.திண்டுக்கல் மாவட்டத்தில் புதிது புதிதாக முளைக்கும் ரவுடிகளால் அச்சம் நிலவி வரும் நிலையில் கேங்வாரையும் அதனால் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொலைகளுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கை.. நியூஸ் தமிழ் செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பிரேம்குமாருடன் மிதார்...