சென்னை மெரினாவில் சாதனைக்காக பிரமாண்டமாக நடத்தப்பட்ட விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சி சோதனையில் முடிந்து, மறக்க முடியாத கரும்புள்ளியாக மாற முக்கிய காரணமே, முழுக்க, முழுக்க காவல்துறைதான் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவர்களை மந்தையை திறந்து விட்டது போல, போலீசார் கையாண்டதன் காரணமாகவே, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலை உருவாக்கி அவசரகால ஆம்புலன்ஸ்கள் கூட இயங்க முடியாத சூழல் உருவாகக் காரணமானது எனக் கூறப்படுகிறது.விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக, காமராஜர் சாலையில் முன்கூட்டியே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காமராஜர் சாலையின் நடுவே தடுப்பு அமைத்து, ஒன்றிரண்டு வழிகளில் மட்டும் மக்கள் கடற்கரைக்குள் அனுமதிக்கப்பட்டனர். வரும் போதே சிரமப்பட்டு வந்ததால், சாகச நிகழ்ச்சி முடியும் முன்பே அதாவது 12 மணிக்கே பெரும்பாலானோர் புறப்பட ஆரம்பித்தனர். ஆனால், நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டவர்களை எந்தவித வழிகாட்டுதலோ கட்டுப்பாடோ இல்லாமல், மொத்தமாக மந்தையை போல திறந்து விட்டதால், மக்கள் வெள்ளத்தில் மூழ்கி காமராஜர் சாலையே ஸ்தம்பித்தது. வெயிலும் பொறுக்க முடியாமல், கூட்டத்திற்குள் புகுந்து செல்லவும் முடியாமல் வாகனங்களில் சென்றவர்கள் தட்டுத் தடுமாறி செய்வதறியாது திகைத்து நின்றனர். நடைபாதையில் சென்றவர்கள் கூட அடி, அடியாக அடி பிரதட்சனம் செய்யும் அளவுக்கு சூழல் மிக மோசமாக இருந்தது. நிழலுக்கு ஒதுங்க இடம் தேடி அலையாய், அலைந்த மக்கள் காமராஜர் சாலையில் இருந்த அரசு அலுவலகங்களுக்குள் சென்று ஒண்டிக் கொண்டனர். குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் பலர் செடிகளுக்குப் பாய்ச்சும் தண்ணீரைப் பிடித்துக் குடித்த பரிதாபநிலையையும் காண முடிந்தது.இத்தனை லட்சம் பேர் கூடுவார்கள் என தெரிந்தும் போதுமான பார்க்கிங் ஏற்பாடுகளும் செய்யப் படவில்லை...இன்னும் கொடுமையாக, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பார்க்கிங் வசதி எங்குஇருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே கடும் சிரமமாக இருந்தது. போதிய அளவு பார்க்கிங் இல்லாததால், கிடைத்த இடங்களிலெல்லாம் மக்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றனர்.நிகழ்ச்சி துவங்கும் முன்பு காமராஜர் சாலையில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளை, திரும்பி வரும் போது கண்ணில் பார்க்கவே முடியவில்லை...மக்களுக்கு போட்டியாக, அதிகாலையிலேயே ட்யூட்டிக்கு வந்துவிட்ட போலீசாரும் சலித்துக் களைத்து, வீடு திரும்புவதிலேயே குறியாக இருந்ததைக் காணமுடிந்தது.சுமார் 20 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தாலும், கூட்ட நெரிசலில் சிக்கி நகர முடியாமல் பரிதவித்தன. இதனால், மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமே, அவசர ஊர்தியான ஆம்புலன்ஸுக்கு போலீசார் தனி வழி ஏற்படுத்தி கொடுக்காதது தான்....! ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க மக்கள் காட்டிய அக்கறையில் பாதியை கூட போலீஸ் காட்டவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் சில இடங்களில் வெளிப்பட்டன. காமராஜர் சாலையை இணைக்கும், சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசண்ட் சாலை, ராதா கிருஷ்ணன் சாலை, சாந்தோம் சாலை என அனைத்து சாலைகளும் மக்கள் தலைகளாக தான் தென்பட்டன. இத்தனை லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம் என்றாலுமே, அதனை ஒழுங்குபடுத்த எந்த முன் நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை என்பதே எல்லாருடைய கேள்வியாகவும் இருக்கிறது...! எந்த வழியாக மக்களை அனுப்ப வேண்டும்? எந்த வழியாக வெளியேற்ற வேண்டும் என்பதையெல்லாம் திட்டமிடவேண்டிய காவல்துறை இவ்வளவு மெத்தனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரில் நான்கில் ஒரு பங்கு போலீசாரிடம் மட்டுமே வாக்கி டாக்கிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், காவல்துறைக்குள்ளேயே தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்பட்டு,மொத்தத்திலும் நிற்கதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வளவு பெரிய மெரினா கடற்கரையில் எந்த இடத்திலும் தகவல் அறிவிப்புக்கு, ஒலிபெருக்கி வசதி இல்லை என்பது மற்றுமொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளதுவான் சாகச நிகழ்ச்சி குறித்து காவல்துறையினர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது விமானப் படை...! அப்படி இருந்தும் கூட, காவல்துறை எந்த ஏற்பாடும் செய்யாமல் கோட்டை விட்டதன் காரணம்தான் யாருக்கும் புரியவில்லை. கூட்டத்தை கட்டுப் படுத்தவோ...கையாளவோ...காவல்துறை தவறியதுதான் மக்களின் துயரத்திற்கும், திண்டாட்டத்திற்கும் காரணமாக அமைந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு போதிய அளவில் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தாலும், அவை அறிவிப்பாக மட்டுமே இருந்தன. இது ஒரு பக்கம் இருக்க, சாதாரண ஐ.பி.எல்.விளையாட்டுக்கே கூடுதல் ரயில்களை இயக்கும் மெட்ரோ நிர்வாகமும், வான் சாகச நிகழ்ச்சியைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட, மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் திணறிவிட்டன. மெட்ரோவிலும் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் தான் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல, புறநகர் பறக்கும் ரயில்களும் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைக்கான ரயில்களையே இயக்கினர். போக்குவரத்து வசதிகளை போதிய அளவில் ஏற்படுத்தி கொடுக்காததால், எப்படி வீட்டுக்குச் செல்வது என தெரியாமல் பெரும்பாலானோர் மெரினாவை சுற்றி சுற்றி வந்தனர்.கடந்த ஆண்டு நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கும், காவல்துறை போதிய ஏற்பாடுகளை செய்யவில்லை என விமர்சனம் எழுந்தது. அதேமாதிரி இன்னொரு சம்பவம் சென்னையில் நடந்தேறியிருக்கிறது. நடந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்ன என கண்டறிந்து திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு, ஆளுக்கு ஆள் தாங்கள் எந்த தவறும் செய்யவே இல்லை என ஒதுங்கிக் கொள்வதும், பிரச்னையை உதறித் தள்ள நினைப்பதும், பொதுமக்களின் அதிருப்தியை அதிகரிக்குமே தவிரக் குறைக்காது என்பதை உரியவர்கள் உணரவேண்டும்.