திருமணம் செய்ய அரசே 30 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்தா எப்படி இருக்கும்? ஆசிய நாடான தென் கொரியாவில் இதுதான் நடக்குது. இதற்குப் காரணம் இல்லாமல் இல்லை. உலகத்துலயே கருவுறுதல் விகிதம் தென் கொரியாவில் குறைஞ்சிருச்சு.2021இல் 0.81 ஆக இருந்த கருவுறுதல் விகிதம், இப்போதைக்கு 0.72 ஆகிவிட்டது. தலைநகர் சியோலில் கருவுறுதல் விகிதம் 0.68தானாம். இதனால் தென் கொரியாவில் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை. கருவுறுதல் விகிதம் 2.1ஆக உயர்ந்தால்தான், தற்போதைய மக்கள்தொகை ஒரே நிலையாக இருக்குமாம்.இதற்கு என்ன செய்யலாம் என ரூம் போட்டு யோசித்த தென் கொரிய அரசு, புதிதாக திருமணமாகும் தம்பதியினரை ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. வீட்டு வாடகை, குழந்தை வளர்ப்பு எனத் திருமணத்துக்குப் பிறகு குடும்ப அமைப்பில் செலவுகள் அதிகரித்துவிடுவதால், தென் கொரிய இளசுகள் திருமணம் செய்துகொள்ள அச்சப்படுகின்றனர். இதனால், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதைத் தடுக்க திருமணம் செய்துகொள்ளவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் பல சலுகைகளை தென் கொரிய அரசு அறிவித்து வருகிறது.திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 38 ஆயிரம் டாலர் இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம் ரூபாயும் , குழந்தைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர், 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக தென் கொரிய அரசு அறிவித்திருக்கிறது. அதுபோக, ஜோடி சேர்ப்பதற்கு ‘டேட்டிங்’ ஆப்புகளையும் அரசே நடத்தத் தொடங்கியிருக்கிறது. இதற்காக பெரும் தொகையையே அரசு ஒதுக்கியிருக்கிறது.இதேபோல, ரஷ்யாவிலும் பெண்கள் கருவுறுதல் விகிதம் 1.5ஆகக் குறைந்துவிட்டது. அங்கும் மக்கள்தொகை நிலைத்தன்மை பெற கருவுறுதல் விகிதம் 2.1.ஆக இருக்க வேண்டும். அங்கு உக்ரைனுடனான போர் காரணமாக 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்துவிட்டனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.இது போன்று காரணங்களால் மக்கள்தொகை குறைந்துள்ளதால் கவலையடைந்துள்ள ரஷ்ய அரசு, மக்கள்தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எப்போதும் பணியில் மூழ்கிக் கிடப்பதைத் தடுக்கும் வகையில், வேலை இடைவேளையின்போது ‘ரொமான்’ஸில் ஈடுபடுவதைக் கருத்தில்கொள்ளுமாறு அதிபர் விளாடிமிர் புடின் அறிவுரையை வழங்கியுள்ளார். இப்படியாவது கருவுறுதல் விகிதம் அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பு. மேலும் ரஷ்யாவின் சில பகுதிகளில் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளனர்.