தமிழக பதிவெண் கொண்ட 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரள போக்குவரத்து துறை அதிகாரிகள் 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்திருப்பது தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென எழுந்துள்ள இந்தப் பிரச்சனைக்கான காரணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கடந்த 2021ஆம் ஆண்டு, ஆல் இந்தியா பர்மிட் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் அந்தந்த மாநிலங்களில் ஆல் இந்தியா பர்மிட் வரியை மட்டுமே செலுத்திவிட்டு பிற மாநிலங்களுக்கு சாலை வரியை செலுத்தாமல், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், தமிழக அரசு மட்டும் பிற மாநில வாகனங்கள் ஆல் இந்தியா பர்மிட்டே வைத்திருந்தாலும், தமிழகத்துக்குள் வரவேண்டுமென்றால் தங்களுக்கு சாலை வரியை கட்ட வேண்டும் என ஆணையிட்டு, கடந்த 2023ஆம் ஆண்டு முதல் வரியை வசூலித்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசிடம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், தமிழக அரசு தனது முடிவில் உறுதியாக நின்றதாக தெரிகிறது. இதன் எதிரொலியால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அம்மாநில அரசு எல்லைப்பகுதியிலேயே மறித்ததோடு, சாலை வரிகள் கட்டவில்லை என தலா இரண்டரை லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை மொத்தம் 70 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து அதிர வைத்தது.இதனை தொடர்ந்து 7ஆம் தேதி இரவு 8 மணி முதல் கேரளாவுக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க மாட்டோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்த நிலையில், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலிருந்து தமிழகத்தின் வழியாக கேரளாவை நோக்கி சென்ற 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கோவை அடுத்த வாளையார் பகுதியில் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பேருந்துகளில் பயணித்த பயணிகள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கேரள அரசு, பேருந்துகளை வழிமறிக்கும் பட்சத்தில் ஆம்னி உரிமையாளர்கள் பக்கம் நிற்பதாக பயணிகள் உறுதியளித்ததன் பேரிலேயே பேருந்துகளை கேரளாவுக்குள் இயக்கினர். பிற மாநில பதிவெண் கொண்ட ஒரு ஆம்னி பேருந்து 3 மாதத்திற்கு ஒரு முறை 1 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் தமிழகத்துக்கு வரி செலுத்துகிறது. ஆனால் கேரளா அரசு, ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் தலா ஒரு பேருந்துக்கு 3 மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் மட்டும் வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் கேரளாவுக்கு வரி செலுத்தி இயக்கி வருகின்றனர். இதன்படி வரி செலுத்தி கேரளாவில் பேருந்துகளை இயக்கும், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாறன், பிற மாநிலங்கள் குறைவாக சாலை வரி வசூலிக்கும் நிலையில், தமிழகம் மட்டும் கூடுதலாக வரி வசூலிப்பதே இந்த பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். அந்தந்த மாநிலங்கள் வசூலிக்கும் வரி பணம் மத்திய அரசிடம் கொடுக்கப்படுவதாகவும், அந்த தொகை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டதாக கூறியதோடு, வரி வசூலிப்பால் ஒரு ஆம்னி பேருந்துக்கு 6 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளதால் நெருக்கடி உருவாகியுள்ளதாக குற்றம் சாட்டினார்.சாலை வரி தொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, திடீரென ஆம்னி பேருந்துகளை தடுத்ததாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன், கேரள அரசை சாடினார். இதையும் பாருங்கள் - தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ஃபைன் - ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்த கேரளா | OmniBusIssue