கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள், கள்ளச் சாராயம் குடித்தவர்கள் என்ற போதும், அமைச்சர்கள் உடனடியாக அங்கு சென்றதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கரூரில் மிதிப்பட்டு இறந்தது, அப்பாவி மக்கள் என்ற நிலையில், மனம் கேட்காமல் உடனடியாக சென்றதாகவும் சட்டசபையில் தெரிவித்தார். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கரூரில் சம்பவம் நடைபெற்ற அதே நாளில் இரவு நேரத்தில் அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “கரூரில் சம்பவத்தன்றே 39 பேர் உயிரிந்தனர். அவர்கள் அனைவரது உடலையும் வைப்பதற்கு பெரிய அளவிலான குளிர் சாதன வசதிகள் மருத்துவமனையில் கிடையாது. மேலும், உயிரிழந்தோரின் உறவினர்கள் உடல்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையிலேயே இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பற்றாக்குறையை போக்க திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உடனடியாக கரூருக்கு வரவழைக்கப்பட்டு 5 மேசைகளில் உடற்கூறாய்வு நடைபெற்றது," என்று விளக்கம் தந்தார். தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, "குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தில் இரவோடு இரவாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதே போன்று தான் கரூர் விவகாரத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து நிகழ்வுகளும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார். இவ்வாறு காரசார விவாதம் நடைபெற்றது.