கரூர் சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில், பரபரப்பான வாதம் நடைபெற்றது.41 பேர் பலியான கரூர் துயர சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் 5 மனுக்கள், நீதிபதிகள் மகேஷ்வரி, அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த வெள்ளிக்கிழமை, விஜய்க்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்களை சுட்டிக்காட்டி த.வெ.க. தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அதாவது, வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜய் மீது, நீதிமன்றம் நேரடியாக விமர்சனத்தை முன் வைத்திருப்பதாக த.வெ.க. தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் வாதாடினார். அதற்கு, கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வரம்புக்கு உட்பட்டது என்ற நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் எப்படி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அப்போது, அதிகார வரம்புக்குள் வராத வழக்கை, தலைமை நீதிபதி அனுமதி பெற்று தான் விசாரணைக்கு எடுக்க முடியும் என்ற நிலையில், கரூர் விவகாரத்தில் அப்படி எதுவும் அனுமதி பெற்றதாக இல்லை என மற்றொரு மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான ஆரியமா சுந்தரம் வாதத்தை முன் வைத்தார். மேலும், சம்பவம் நிகழ்ந்ததும், கரூரில் இருந்து விஜய் தப்பிச் சென்றதாக அரசு தரப்பில், உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது என்ற த.வெ.க. தரப்பு வழக்கறிஞர், அது முற்றிலும் தவறு எனவும், காவல்துறை பாதுகாப்புடன் தான் விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார் எனவும் விளக்கம் கொடுத்தார். மேலும், அசம்பாவிதம் நிகழ்ந்ததும் விஜய்யை அந்த இடத்தில் இருந்து போக சொன்னதே காவல்துறை தான் என்ற த.வெ.க. தரப்பு, விஜய் அங்கு இருந்தால் மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் எனக் கூறி போக சொன்னதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் வைத்து சந்திக்க சென்ற கட்சி நிர்வாகிகளை போலீஸ் அனுமதிக்க மறுத்து விட்டது எனவும் வாதிட்டது. இவை எதுவுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜய் குறித்து அவதூறாக பல கருத்துக்களை நீதிபதி செந்தில்குமார் முன் வைத்திருப்பதாக த.வெ.க. வாதிட்டது.தொடர்ந்து, கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருக்கும் நிலையில், முழுக்க முழுக்கமாநில போலீஸ் அதிகாரிகள் அடங்கிய அந்த குழு மீது நம்பிக்கை இல்லை என்ற த.வெ.க. தரப்பு, உச்ச நீதிமன்றம் தனியாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியது. த.வெ.க. தரப்பு வாதத்திற்கு பதிலளித்த அரசு தரப்பு, SIT குழுவுக்கு தலைமை தாங்கும் அதிகாரி அஸ்ரா கார்க் ஏற்கனவே சிபிஐ-யில் பணிபுரிந்த சிறப்பான அதிகாரி தான் எனவும், SIT மீது சந்தேகப்பட வேண்டாம் எனவும் விளக்கம் அளித்தது.அப்போது, பிரச்சாரம், ரோடு ஷோ நடத்துவது தொடர்பாக வழிகாட்டுதல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, எப்படி கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்பட்டது? எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு உயிரிழப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது என கூறிய அரசு தரப்பு, கரூர் சம்பவத்தில் இன்று வரையில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என வாதிட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தாரா இல்லையா? என்பது தற்போது தொடர்பில்லாதது என்றனர். மேலும், பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வில், வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கை விசாரித்து உள்ளது எனவும், 2 நீதிமன்றங்களில் ஒரே நாளில் இரு வேறு உத்தரவுகளை எப்படி பிறப்பித்தனர்? சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எப்படி SIT விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது? உயர்நீதி மன்ற மதுரை அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஏற்கனவே வழிகாட்டுதல்கள் கோரிய வழக்கு இன்னும் தீர்க்கப்படாத சூழலில், எப்படி விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.த.வெ.க. தரப்பு வாதத்தை அடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், நீதிமன்றம் அமைத்த SIT குழு மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய சிறுவனின் தந்தை, சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என வாதிட்டார். மேலும், விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, ஏடிஜிபி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தது வழக்கை முன்கூட்டியே முடிவு செய்யும் வகையில் இருப்பதாக சந்தேகம் எழுப்பப் பட்டது. அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றக் கூடாது என அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல, சிபிஐ விசாரணை கோரிய மற்றொரு மனுதாரரும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்து விட்டனர் எனவும், காவல்துறை தடியடி நடத்தியது எனவும் குற்றம் சாட்டிய அந்த மனுதாரர், திடீரென தடியடி நடத்தப்பட்டதும் ஏன் எதற்கு? என தெரியாமல் மக்கள் சிதறி ஓடினார்கள் எனவும், கூட்டத்திற்குள் எந்த பதிவு எண்ணும் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக நுழைந்தது எனவும் கூட்டத்திற்குள் சமூக விரோதிகள் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தார் அந்த மனுதாரர்.மேலும், கூட்டத்தில் வீசப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி புகைப்படம் இருந்ததாக கூறிய மனுதாரர், சம்பவம் நிகழ்ந்ததும் காவல்துறை மீதும், தமிழக அரசு மீதும் எந்த தவறும் இல்லை என, அவசர கதியில் நிரூபிக்க பார்த்ததும் சந்தேகத்தை எழுப்பும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, சம்பவம் நிகழும் முன்பே கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட இருப்பதாக செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான திமுக உறுப்பினர் பதிவிட்டு இருந்ததாகவும், மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டே இருக்க முடியாது என்றதுடன், இரவோடு இரவாக 41 பேருக்கும் உடற் கூராய்வு நடத்தும் அளவுக்கு மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா? எத்தனை மேஜைகள் இருக்கிறது என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. பரப்புரையின் போது ரவுடிகள் களமிறக்கப்பட்டதாக கூறுவதெல்லாம் ஏற்க முடியாதது எனவும் ஆதாரம் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டாக கூறி வருகிறார்கள் எனவும் காவல்துறை தெரிவித்தது. மேலும், சேலத்திற்கு மருத்துவ மாநாட்டிற்கு வந்த மருத்துவர்களை கரூருக்கு வரவழைத்து பிரேத பரிசோதனை செய்ய வைத்ததாக கூறிய அரசு தரப்பு, பரப்புரை கூட்டத்தில் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள் எனவும் விளக்கம் கொடுத்தனர்.நண்பகல் 12 மணிக்கு வர வேண்டிய விஜய், இரவு 7 மணிக்கு தாமதமாக வந்தது தான் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் காரணம் என்ற அரசு தரப்பு, கூட்டத்திற்கு வந்தவர்கள் உணவு, தண்ணீர் இன்றி சோர்வாகி மயக்கம் அடைந்ததாக தெரிவித்தது. அதற்கு, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சந்திரா என்பவரது கணவர் தரப் பில், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாக அரசு தரப்பு கூறுகிறது? ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.இதனையடுத்து, கரூர் விவகாரத்தில் என்ன நடந்தது என விரிவாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறோம் என்ற அரசு தரப்பு, அதற்காக கால அவகாசம் கோரியது. அப்போது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதிகள், அந்த பிரமாண பத்திரத்தை பார்த்த பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் விஜய் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் சாராம்சத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் கோரிக்கை ஒரு மாதிரி இருக்கிறது? உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஒரு மாதிரி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.