காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது.எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், முதலமைச்சர் என பல பொறுப்புகளை அள்ளித் தந்த காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இப்படி ஆர்.எஸ்.எஸ்சை புகழ்ந்து நிந்திக்க வேண்டாம் என கட்சியினர் பொங்கி எழும் அளவுக்கு வித்திட்டவர் தான் திக்விஜய் சிங்.காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டம் கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பதிவிட்டிருந்த ஒற்றைப்பதிவு தான் காங்கிரஸ் கட்சியின் மொத்த கூடாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாஜக மூத்த தலைவர் அத்வானியின் காலடியில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர், பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.காங்கிரஸில் வேரூன்றி கிடக்கும் மூத்த தலைவரான இவரே இப்படி பேசியிருந்தது கட்சியில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காங்கிரசில் உள்ள மற்ற தலைவர்களுமே இவரது இந்த பேச்சை எதிர்ப்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். கட்சியினர் மத்தியில் பலவிதமான கருத்துகளை தூண்டியது. சிலர் ஆர்.எஸ்.எஸ்சை புகழ்ந்தும் பலர் காங்கிரசை புகழ்ந்தும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட திக்விஜய் சிங், காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நம்பவில்லை என்றும் காந்தியின் கொலையாளிகளிடமிருந்து கற்றுக்கொள்ள தங்களுக்கு எதுவும் இல்லை என விளக்கமளித்தார், மேலும், தாம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியினர் அவரை விடவில்லை.இதற்கு முன்னதாக திக்விஜய் சிங், கடந்த சில நாட்களுக்கு முன் ராகுலை டேக் செய்து காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தங்களும் அதிகாரப் பரவலாக்கமும் தேவை என்று பதிவிட்டதையும் அடுத்து கடும் வசைபாடல்களுக்கு ஆளாகியுள்ளார். திக் விஜய் சிங்கின் பேச்சுக்கு சூசகமாக ஆதரவு தந்துள்ள காங்கிரஸ் எம்பி சசிதரூர், கட்சியின் அமைப்பு வலுவாக இருந்தால் தான் கட்சி பலமடையும் என கூறியிருக்கிறார். இதே போல் மற்றொரு நிர்வாகியும் திக்விஜய் சிங் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில், திக்விஜய் சிங் கருத்துக்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, ஆர்.எஸ்.எஸ் - பாஜக கூட்டணியைப் போல காங்கிரஸ் ஒருபோதும் மத அரசியல் செய்வதில்லை என்றும் தங்களுக்கு அதிகாரம் குறைவாக இருக்கலாம், ஆனால் முதுகெலும்பு பலவீனமானதல்ல என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழக எம்பியான மாணிக்கம் தாகூர், அல் கொய்தாவை போல் ஆர்.எஸ்.எஸ் என்பதும் வெறுப்பால் ஆன ஒரு அமைப்பு என்று கூறியதோடு, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என வினவினார்.ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி வலுவான தலைமை இல்லாமல் தள்ளாடி வருவதாக சொல்லப்படும் நிலையில், கட்சிக்கு எதிராக கருத்து சொல்பவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு தலைமை பலவீனமாக இருக்கிறது என்பது திக் விஜய் சிங் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் ஆளும் கட்சியாக ஆகிறதோ இல்லையோ நிச்சயம் ஆர்.எஸ்.எஸ்சின் கிளை கட்சியாகவே மாறும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் குமுறலாக உள்ளது.