அரை நூற்றாண்டாக, தமிழ்த் திரையுலகை கட்டி, ஆண்டு வரும் அசாத்திய நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையில், திரையுலகம் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. கலைத்தாய் பெற்றெடுத்த கருப்பு தங்கம், ரஜினிகாந்தின் கண்டக்டர் வாழ்க்கை தொடங்கி கோலிவுட்டின் சிம்மாசன நாயகன் வரையிலான நீண்ட நெடும் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.சினிமாவில், நீண்ட காலம் நிலைத்திருப்பதே சுலபமான விஷயமாக இல்லாத நிலையில், என்றைக்குமே ராஜாவாக அதுவும் நம்பர் ஒன் இடத்திலேயே நீடிப்பதெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.கோலிவுட் சினிமா புத்தகத்தை, மூன்று தலைமுறையாக, எப்படி புரட்டி பார்த்தாலும் ரஜினிகாந்த் என்ற பெயர் ஆதிக்கம் செலுத்தும். ஆம், 1975ஆம் ஆண்டு முதன்முதலில் திரை வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட ரஜினிகாந்த், இன்று தனது 173ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லும் போதேதேகம் புல்லரிக்க தான் செய்யும்.கருப்பு வெள்ளை படத்தில் துவங்கிய ரஜினியின் திரை வாழ்க்கை கலர் FILM-ல் ஆதர்ஷ நாயகனாக கலக்கி, கோலிவுட்டில் GOAL போட்டு, பாலிவுட்டையும் விட்டு வைக்காமல் அனிமேஷனிலும் ஆட்டம் காட்டி அசர வைத்திருக்கிறது.கர்நாடக மண்ணில், சிவாஜி ராவ் கெயிக்வாட் என சாதாரண நடத்துநராக இருந்தவரை, ரஜினியாக தத்தெடுத்து கொண்ட தமிழகம், உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்து கொடுத்து ஒய்யாரத்தில் தூக்கி வைத்துஅழகு பார்த்து வருகிறது. எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு பெரும் திரை ஆளுமைகள் இருக்கும் போது அறிமுகமான ரஜினியின் கருப்பு நிறமும், கிராமிய முக அம்சமும் தமிழ் ரசிகர்களை அளவு கடந்து ரசிக்க வைத்தது.எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மினுமினுக்கும் தேகங்களுக்கு மத்தியில் நிற ஆதிக்கத்தை தகர்த்தெறிந்து கருப்பு வைரமாக ஜொலிக்க தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.மின்னல் வேக நடை, புருவத்தை உயர்த்த வைக்கும் ஸ்டைல், ரசிக்க வைக்கும் வசன உச்சரிப்பு என தற்போதைய மாஸ் ஹீரோக்களுக்கு புதிய பாதை வகுத்து கொடுத்த பெருமையும் ரஜினியை தான் சேரும். ரஜினியை இயல்பாகவே தமிழ் மக்களுக்கு பிடித்து போக, பட்டி தொட்டியெங்கும் ரஜினியின் புகழ் சென்று சேர முக்கிய காரணமே, அவர் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரம் தான்.எளிய மக்களின் குரலாக, உழைக்கும் வர்க்கத்தின் அடையாளமாக ரஜினிகாந்த் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரம் தான் ரஜினியை, இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் திரை ஆளுமையாக மாற்றியது. ரஜினியின் கவர்ந்திழுக்கும் நடிப்பு, தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்து பதிந்து விட்டது.திரை வாழ்க்கையை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே கலைத்தாயின் ஆசியில் கைக்கு தேடி வந்தது சூப்பர் ஸ்டார் பட்டம். அப்படி இருந்தும் கூட ஒரு நாளும் உதாசீனம் செய்யாமல் உழைப்பை மட்டும் நம்பிய ரஜினியால் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கே கூடுதல் கௌரவம் கிடைத்தது. ரஜினியிடம் இருப்பதால் தான் சூப்பர் ஸ்டார் பட்டம் இன்னும் யாரும் எட்டாத உயரத்தில் இருக்கிறது.பணம், புகழ், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கு ஏற்றாத எளிமையின் முகமான ரஜினிக்கு, பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்கே, வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகள் மணி மகுடம் சேர்த்துள்ளன.ரஜினிகாந்த் என்ற BRAND மூலமாக கோலிவுட் சினிமாவுக்குள் வந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் வீழ்ச்சியை நோக்கி சென்றதே கிடையாது. ரஜினியின் படம் என்றாலே வசூல் கிங்காக தான் இருக்கும். ரஜினியை நம்பியவர்கள் கைவிடப்படார் என்ற சொற்றொடர் இன்றளவும்சொல்லப்பட்டு தான் வருகிறது. நஷ்டத்தில் உழன்ற தயாரிப்பாளர்கள் கூட ரஜினி படம் மூலம் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள்.ரஜினி 49 வயதாக இருக்கும் போது, கே.எஸ்.ரவிக்குமார் எழுதிய வசனம் தான், வயசானாலும் அந்த அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல என்பது. இந்த வசனம் ரஜினியின் 75 வயதிலும் பொருத்தமாக இருக்கிறது. ரஜினியின் ரத்தத்திலேயே ஊறியது தான் அவரது ஸ்டைல்.ரஜினி என்ற கலை வடிவத்தை தமிழகம் ஒரு போதும் கை விடாது என்பதற்கு இன்றளவும் ரஜினியின் படங்கள் கோடிகளில் பிஸ்னஸ் ஆகிறது என்பது தான் எடுத்துக்காட்டு. பவள விழா காணும் ரஜினிகாந்த் பல்லாண்டு வாழ வேண்டும் என நியூஸ் தமிழும் வாழ்த்துகிறது.