சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண மக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்த நிலையில், முன்னேற்பாடுகள் முறையாக இல்லாததால் நிகழ்ச்சி முடிந்து கூட்ட நெரிசலில் சிக்கி, வெயிலில் நொந்து, வந்ததே தப்பு என புலம்பி கொண்டே திரும்பி சென்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று 4 மணி நேரத்திற்கு மேலாகியும், வீட்டிற்கு திரும்ப முடியாமல் கூட்ட நெரிசலிலும், வாகன நெரிசலிலும் சிக்கி மக்கள் அவதிக்குள்ளான காட்சிகள் தான் இவை....இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், வான் சாகச நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், அதனை நேரில் கண்டு ரசிக்க லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். விடுமுறை தினம் என்பதால், பேருந்துகள், ஆட்டோ, கார், இருசக்கர வாகனம் என மக்கள் குடும்பத்துடன் மெரினா பீச் நோக்கி படையெடுத்த நிலையில், எழும்பூர், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சேப்பாக்கம், அண்ணா சாலை, உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தங்களது வாகனங்களை பாதியிலேயே ஆங்காங்கே நிறுத்தி விட்டு மக்கள் மெரினா நோக்கி நடந்தே சென்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. சாகச நிகழ்ச்சியை காண வந்த விஐபி-களுக்கு மட்டும் குளிர் பந்தல் வசதி செய்து கொடுக்கப்பட்டதாகவும், தாங்கள் சுட்டெரிக்கும் உச்சி வெயிலிலும், கடற்கரை மணலின் வெப்பத்திலும் நொந்து போய் நின்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கூட்டத்தை சமாளிப்பதற்காக கடற்கடையில் இருந்த தற்காலிக கடைகள் அகற்றப்பட்டதால், உணவு குடிநீர் இல்லாமல் மணிக்கணக்கில் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை எனவும், போக்குவரத்து போலீசாரும் மக்களின் கவனத்தை திசை திருப்பி விடுகிறார்களே தவிற, முறையான வழி ஏற்படுத்தி தரவில்லை என கொதித்தெழுந்தனர். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதையை VIPகளுக்காக ஒதுக்கியதால், வீல் சேர் பயன்படுத்துபவர்களால் கடற்கரைக்கு சென்று நிகிழ்ச்சியை காண முடியவில்லை என மாற்றுத்திறனாளி ஒருவர் வருத்தம் தெரிவித்தார்.இந்நிலையில் 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிவடைந்த உடன், VIP மற்றும் VVIP களுக்கு போலீசார் தனிவழி ஏற்படுத்தி அனுப்பி வைத்த நிலையில், பொதுமக்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். மேலும் மெரினா கடற்கரை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், அவ்வழியாக வந்த மநாகாட்சியின் நாய் பிடிக்கும் வண்டியிலும் சிலர் தொங்கியபடி சென்ற அவலம் அரங்கேறியது.பல மணி நேரம் தாகத்தால் தவித்த மக்கள், அங்கே செடிகளுக்கு ஊற்றுவதற்காக வைத்திருந்த தண்ணீரை பிடித்து குடித்த அவலமும் அரங்கேறியது. மேலும், விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கூர்மையான கம்பிகள் கொண்ட தடுப்பு மீது ஏறி குதித்தும் சென்றனர்.இதனிடையே கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் ஏற்பட்டு சிலர் மயங்கியும் விழுந்ததால், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குறிப்பாக கூட்டத்தில் சிக்கி பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை கண்டு கொள்ளாமல் சென்ற போலீஸ் வாகனத்தை வழிமறித்து தட்டிக் கேட்ட பின்னர், உறவினர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அடித்து பிடித்து கொண்டு சென்ற மக்கள் சிலர், இலவசம் என்பதால் நிகழ்ச்சியை காண வந்தது தப்பா போச்சேனு புலம்பி கொண்டே சென்றனர். மேலும் ஞாயிற்று கிழமை என்பதால், ரயில்கள் குறைவாக இயக்கப்பட்ட நிலையில், மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து ரயில்கள் மூலம் புறப்பட்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில், அதுவும் போதுமானதாக இல்லை.வான் சாகச நிகழ்ச்சியை கான 15 லட்சம் பேர் வருவார்கள் என்று முன்பே கணிக்கப்பட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் எதையும் முறையாக செய்யவில்லை என மக்கள் வெயிலில் வெந்து நொந்தபடி புலம்பி கொண்டே சென்றனர்.