மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் கடத்தலின் சர்வதேச மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதனை தடுத்து நிறுத்துவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூறியுள்ள அவர், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலும், நடமாட்டமும் அதிகரித்திருப்பதாகவும், இளைய தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சாடியுள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.