காலம் எவ்வளவு மாற்றத்தை அடைந்தாலும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் இன்றும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை வெளிகாட்டுகிறது இந்த சிறுமியின் கதறல்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20-க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன.அப்பகுதியில் ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி தனது பள்ளி பருவத்தை மகிழ்ச்சியாக தனது நண்பர்களுடன் படித்து வந்துள்ளார்.இந்நிலையில் 7-ம் வகுப்பு வரை படித்து வந்த சிறுமியை இனிமேல் பள்ளிக்கு போக கூடாது என்று சொல்லி படிப்பை நிறுத்தி உள்ளனர். அந்த மாணவி நான் பள்ளிக்கு போக வேண்டும், படிக்க வேண்டும் என்று கூறியும் அதை ஏற்காத பெற்றோர் எந்த காரணத்தையும் சொல்லாமல் படிப்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காலிகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பவருக்கும் அந்த சிறுமிக்கும் திருமணம் நடத்தி வைத்து பெற்றோர்களே பிள்ளையை பாழுங்கிணற்றில் தள்ளி உள்ளனர். பின்னர் அந்த சிறுமியை மலைகிராமத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி ”எனக்கு இதில் விருப்பம் இல்லை.. நான் என்னுடைய வீட்டிற்கு போகவேண்டும்” என்று கதறிக் கொண்டே வீட்டை விட்டு ஓடி உள்ளார். ஆனால் அவரது உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிகொண்டு சென்று கணவர் வீட்டில் விட்டுள்ளனர். அப்போது சிறுமியின் கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அதை வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களே 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த கொடுமையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு நடந்த கொடுமையை கண்டித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் படியுங்கள் : ஒரு மாதக்குழந்தைக்கு 40 முறை சூடு.. காய்ச்சலை குணப்படுத்த பெற்றோர் செய்த செயல்