தமிழகத்தில் 15 ஆண்டுகள் கடந்த அரசு பேருந்துகளை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதியளிப்பதன் மூலம் மக்களின் உயிரோடு அரசு விளையாடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட 6 ஆயிரத்து 247 அரசு ஊர்திகள், அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அவற்றை பயன்பாட்டிலிருந்து நீக்கி, புதிய ஊர்திகளை வாங்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.