கேரளாவில் அரசு தலைமைச் செயலர் பணி ஓய்வு பெற்ற தினத்தில் அவரது மனைவியே புதிய தலைமைச் செயலராக பதவியேற்ற சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி வேணு கடந்த 31 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த அவரது மனைவி சாரதா முரளீதரன் அதே தினம் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றார்.இருவரும் 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர்கள் என்றாலும் கணவர் வேணுவை விட சாரதா முரளீதரன் எட்டு மாதங்கள் இளையவர் என்பதால் அவர் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வேணுவின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் அரசு உயர் பதவிகளில் இருப்பது சகஜம் என்றாலும், தலைமைச்செயலாளர் பதவியை கணவரிடம் இருந்து மனைவி பெறுவது இதுவே முதல் முறை என கூறினார்.