அக்டோபர் மாதத்தில் இண்டிகோ ஏர்லைன்சின் சந்தை பங்களிப்பு 63 புள்ளி 3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இண்டிகோவில் 86 புள்ளி 40 லட்சம் பேர் பயணித்ததை தொடர்ந்து, நாட்டில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை சுமந்து சென்ற ஏர் லைன்ஸ் என்ற பெயரை இண்டிகோ தட்டிச்சென்றுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தனது வரலாற்றில் அதிகபட்ச பயணிகளை இண்டிகோ ஏற்றிச் சென்றது. இந்த மாதம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்பட ஏர் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 14 புள்ளி 9 சதவிகிதம் எனவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.