ஆசிய கோப்பை தொடரின், இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் கோப்பையை வென்றது. துபாயில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் ஆட்டமிழந்து, 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும், முடிவு மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய அணி மீதான அழுத்தத்தை பாகிஸ்தான் பக்கம் திருப்பி விட்ட திலக் வர்மா, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் குவித்தார். இதனால், 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.ரசிகர்கள் கொண்டாட்டம்; ஆசிய கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில், ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், பாட்டுப் பாடியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மூவர்ண கொடியை கையில் ஏந்திக் கொண்டு, ஊர்வலமாக சென்று, ரசிகர்கள் வெற்றி முழக்கத்தை எழுப்பினர்.பிரதமர் மோடி வாழ்த்து: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானத்தில், ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையை பார்த்ததை போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், போரில் கிடைத்ததை போன்றே விளையாட்டிலும், இந்தியாவுக்கு வெற்றி கிடைத்ததாகவும், பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.21 கோடி பரிசு: ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு 21 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக, இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பரிசுத் தொகையை அணியின் தலைமை பயிற்சியாளர், பிற பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.கேப்டனின் தாராளம்; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெற்ற ஊதியம் அனைத்தையும் இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார். இந்த கோப்பை அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை என்றும், இதற்காக அனைத்து வீரர்களும் கடுமையாக உழைத்ததாகவும் சூர்யகுமார் யாதவ் கூறி உள்ளார். ஆட்ட நாயகன்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். லீக் போட்டிகளில் தொடர்ந்து 3 அரை சதம் விளாசிய அபிஷேக், மொத்தம் ஆடிய 7 போட்டிகளில் 314 ரன்களை குவித்து, 200 ஸ்டிரைக் ரேட் மற்றும் 44.85 சராசரியுடன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.