இந்தியாவின் மேற்கு வங்கத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், வரும் அக்டோபர் மாதம் அந்த மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குப் பிடித்த மீன் வகைகளுள் ஒன்றான ஹில்சா மீனின் வரத்தில் அவர்கள் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.உலகின் மிகப் பெரிய ஹில்சா மீன் உற்பத்தியாளரான வங்கதேசம், இந்தியாவுக்கு ஹில்சா ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியதும், அதன் ஏற்றுமதியைத் தடை செய்ததுமே இதற்குக் காரணம்.டாக்காவில் புதிய இடைக்கால அரசு பதவியேற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் மீன்கள் ஏற்றுமதியாகின்றன. ஆனால் இம்முறை ஹில்சா மீன் வங்கதேசத்தின் எல்லை கடந்து ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹில்சா வகை மீன் வங்கதேசத்தின் தேசிய மீனாக இருந்தாலும் அது ஓர் ஆடம்பர மீனாகக் கருதப்பட்டது. பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே இதை வாங்கி உண்ண முடிந்தது. ஏழைகளால் இந்த மீனை வாங்க முடியாத நிலை இருந்தது.இதற்கு முன் இருந்த வங்கதேச அரசு துர்கா பூஜையின்போது இந்த மீனின் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிவிடும். இதை வங்கதேசம் இந்தியாவிற்கு வழங்கும் ஒரு பரிசாகவே கருதியது. வங்கதேசத்தின் தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு அதிக அளவில் இந்த மீனை ஏற்றுமதி செய்தால், வங்கதேச மக்கள் இந்த மீனைச் சாப்பிட முடியாது அந்த நாட்டின் அரசுத்துறை கூறுகிறது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு, ஹில்சா மீன் ஏற்றுமதியைக் கொண்டு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வந்தது. திருவிழாக் காலங்களின்போது அவர் இந்தியாவிற்கு அடிக்கடி மீன்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பார். ஆனால் தற்போது எடுக்கப்பட்ட முடிவு ஷேக் ஹசீனாவின் நடவடிக்கைகளுக்கு மாறாக உள்ளது.ஷேக் ஹசீனா மேற்கு வங்கத்தின் முதல்வரான மம்தா பானர்ஜிக்கு பலமுறை ஹில்சா மீனை அனுப்பி வைத்துள்ளார். இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே நீண்ட காலமாக நடந்து வரும் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 2017ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜிக்கு 30 கிலோ ஹில்சா மீனை பரிசாக வழங்கினார்.இந்த ஹில்சா வகை மீன் ஏற்றுமதி மீதான தடை நீங்காதா என்பதே மேற்கு வங்க மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளத.