நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் KCR-ன் மகன் KTR தான் காரணம் என காங்கிரஸ் பெண் அமைச்சர் கூறியது, டோலிவுட்டை கொந்தளிக்க வைத்துள்ளது. இருவரும் மனமொத்து எடுத்த முடிவில் எந்த அரசியல் சதியும் கிடையாது என சமந்தாவே நேரடியாக பதிலடி கொடுத்த நிலையில், தனது குடும்பத்தை மிகவும் இழிவுபடுத்தியிருப்பதாக நடிகர் நாகார்ஜூனாவும் பொங்கி எழுந்துள்ளார்.நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நாகசைத்தன்யா-சமந்தா விவாகரத்துக்கு பல யூகங்கள் எழுந்த நிலையில், தற்போது விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என அதிர வைத்த பெண் அமைச்சருக்கு எதிராக சினிமா உலகமே கொதித்தெழுந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த நாகசைத்தன்யா-சமந்தா ஜோடி, 2021-ம் ஆண்டு விவாகரத்து அறிவித்தனர். தற்போது நடிகர் நாகசைத்தன்யாவுக்கும், நடிகை சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், மயோசிடிஸ் நோய் பாதித்து சில மாதங்கள் ஓய்வில் இருந்த சமந்தா, PHOTOSHOOT-களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பேட்டி கொடுத்த தெலங்கானா மாநில காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவின் விவாகரத்திற்கு கே.டி.ஆர்.தான் காரணம் என்றதோடு, ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய நடிகர் நாகார்ஜுனா குடும்பத்தின் N CONVENTION செண்டர் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து கொடுக்க, KTR சமந்தாவை தனிமையில் இருக்க அழைத்ததாக கூறி அதிரவைத்தார். அதற்கு நாகார்ஜூனா வற்புறுத்தியதால் தான், சமந்தா விவாகரத்து முடிவை நோக்கி சென்றார் எனவும் அவர் பேசியது, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதோடு, தெலுங்கு சினிமாவில் பல நடிகைகள் FIELD OUT ஆக காரணமே, கே.டி.ஆர்.தான் எனவும் குண்டை தூக்கி போட்டார் கொண்டா சுரேகா.KTR குறித்து விமர்சிக்க பெண் அமைச்சர் பேசியது, தெலுங்கு சினிமாவில் முக்கிய அந்தஸ்தில் இருக்கும் நாகார்ஜூனா குடும்பத்தையே இழிவுபடுத்தி சேற்றை அள்ளி பூசுவது போல இருந்தது. நடிகை சமந்தா குறித்தும் அவதூறு பரப்புவது போல இருக்கவே, மொத்த டோலிவுட்டும் கொதித்தெழுந்தது. இதனையடுத்து, கொண்டா சுரேகா கருத்துக்கு நடிகை சமந்தாவே பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் சண்டையில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை இழுக்க வேண்டாம் எனக் கூறிய நடிகை சமந்தா, தனது சினிமா பயணத்தை இழிவான செயல்களை கூறி சிறுமைப்படுத்திட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல, நாகார்ஜூனாவும் கோபத்துடன் கொண்டா சுரேகாவுக்கு எதிராக பதிவு போட்டுள்ளார். அரசியல் எதிரிகளை விமர்சிக்க, சினிமாவில் இருப்பவர்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள் என வெகுண்டெழுந்த நாகார்ஜூனா, தனது குடும்பத்தின் மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என கடுமையாக எதிர்வினையாற்றினார். இதுவரைக்கும் தங்களது விவாகரத்து குறித்து வெளியான அடிப்படையற்ற வதந்திக்கு, தனது குடும்பத்திற்காகவும், சமந்தாவுக்காகவும் தான் அமைதியாக இருந்ததாக கூறிய நடிகர் நாகசைத்தன்யா, கொண்டா சுரேஷ் கூறியிருப்பது தவறானது என்பதை தாண்டி, ஏற்றுக் கொள்ளவே முடியாதது என பதிலடி கொடுத்துள்ளார். சினிமா நட்சத்திரம் என்பதற்காக பெண் என்றும் பாராமல் இஷ்டத்துக்கு பேசுவது அசிங்கம் என ஆவேசமாகியுள்ளார் நடிகர் நாகசைத்தன்யா...!தெலுங்கு திரையுலகம் தாண்டி முன்னணி நடிகர்கள் பலரும் சமந்தா விவாகரத்தில் கொண்டா சுரேகாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவே, தனது கருத்தை திரும்பப் பெறுவதாக பின் வாங்கியுள்ளார் கொண்டா சுரேகா....பெண்களிடம் கே.டி.ஆர்.எவ்வளவு இழிவாக நடந்து கொள்கிறார் என்பதை சொல்ல வந்ததாக கூறிய கொண்டா சுரேகா, தனது கருத்து சமந்தாவையோ...ரசிகர்களையோ புண்படுத்தியிருந்தால், அதனை தாம் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.கொண்டா சுரேகாவின் பேச்சு சினிமாவிலும், அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகும் கூட, எப்பேற்பட்ட முட்டாள்தனமான கருத்தையும் பேசிவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்கும் சில அரசியல்வாதிகளை பார்க்கும் போதே அருவெறுப்பாக இருப்பதாக கூறியிருக்கும் நடிகர் நானி, அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரியே இல்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.! உயர் பதவியில் இருப்பவர்களே இப்படி பொறுப்பற்ற தன்மையில் பேசியிருப்பதாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும் கொண்டா சுரேகாவை வறுத்தெடுத்துள்ளார்.