ஹைதராபாத்தில், பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை நிதி அகர்வாலை சூழ்ந்து கொண்டு, ரசிகர்கள் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் நடிகையை நகர கூட விடாமல் திணற வைத்த ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி, நிதி அகர்வால் தப்பி பிழைக்கும் நிலை தான் ஏற்பட்டது.இவ்வளவு ஆண்களுக்கு மத்தியில், ஒரே ஒரு பெண்ணாக நிதி அகர்வால் சிக்கிக் கொண்டு படாதபாடு பட்ட வீடியோ தான், ஒட்டு மொத்த நடிகைகள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.பிரபாஸ் நடிப்பில், தி ராஜா சாப் என்ற படம், அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில், படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தின் லூலூ மாலில் நடைபெற்றது. பாடல் வெளியீட்டு விழாவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில், விழா நடக்கும்போதே பரபரப்பான சூழல் ஏற்பட தொடங்கியது. பாதுகாப்பு தடுப்புகளை மீறி பின் பக்கமாக நடிகை நிதி அகர்வாலை நெருங்க முயன்றதால் நிலைமை கைமீறியது. இருப்பினும், நடிகைக்கு அரணாக பவுன்சர்கள் நின்று கொண்டனர்.இந்த நிலையில், நிகழ்ச்சியை முடித்து விட்டு நிதி அகர்வால் வெளியே வரும் போது, செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில், ரசிகர்கள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டனர். பவுன்சர்கள் எவ்வளவோ முயன்றும் கூட, அந்த கூட்டத்திற்குள் சிக்கி நிதி அகர்வால் திணறும் நிலை ஏற்பட்டது.கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வாலை காருக்கு அழைத்துச் செல்வதற்குள் போதும் போதும் என ஆனது. நகர கூட முடியாத அளவுக்கு நிதி அகர்வாலை சுற்றி வளைத்த கூட்டம், அத்துமீறி நடிகையை தொட்டு இழுத்து மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.சிலர் ஆர்வ மிகுதியில் நிதி அகர்வாலின் உடையை பிடித்து இழுக்க, எப்படியாவது தப்பித்தால் போதும் என பயத்தோடும், பதற்றத்தோடும் நிதி அகர்வால் காணப்பட்டார். இதனையடுத்து, சில பாதுகாவலர்கள் சுதாரித்துக் கொண்டு கூட்டத்தை விலக்கி விட்டு நிதி அகர்வாலை காருக்கு அழைத்துச் சென்றனர். ரசிகர்களிடம் இருந்து நிதி அகர்வாலை மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.காரில் ஏறி அமர்ந்த நடிகை நிதி அகர்வால், கோபத்தை வெளிப்படுத்தியதோடு, முகத்தில் கையை வைத்துக் கொண்டு அசௌகரியமாக அமர்ந்திருந்தார். காருக்குள் ஏறிய பிறகும் கூட நிதி அகர்வால் சில நிமிடங்கள் தனக்கு நடந்த பதட்டமான சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.பாதுகாப்பு குறைபாடு காரணமாக, நடிகை நிதி அகர்வால் சங்கடத்திற்குள்ளான சம்பவத்தின் வீடியோ வெளியான நிலையில், மால் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.தெலுங்கில் முன்னணி நடிகையான நிதி அகர்வால், தமிழில் சிம்புவுடன் ஈஸ்வரன், ரவி மோகனுடன் பூமி, உதயநிதி ஸ்டாலினுடன் கலக தலைவன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதோடு சமீபத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீர மல்லு படத்திலும் நிதி அகர்வால் நடித்திருந்தார். திரை நட்சத்திரங்களை, குறிப்பாக நடிகைகளை பொது சொத்து போல நினைத்துக் கொண்டு, சில இடங்களில் ஆர்வ மிகுதியில் ரசிகர்கள் அத்துமீறி வருவது தொடர் கதையாகி வருகிறது.ரசிகர் மனப்பான்மை என்பதை தாண்டி, ஒரு நபரின் அடிப்படை பாதுகாப்புக்கு கூட மதிப்பு அளிக்காமல் அராஜகமாக நடந்து கொள்வது சரியாக இருக்காது என்பதை உணர வேண்டும்.