இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் சீன கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அரண்களாக இருக்கும் இந்த கடற் பிரதேசத்தில் கடந்த மாதம் சீனாவின் மூன்று சர்வே கப்பல்கள் உலா வந்தன. வங்க கடற்பகுதியை ஒட்டிய இடங்களில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதால், சர்வே கப்பல் என்ற போர்வையில் சீனா உளவு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் சில நங்கூரமிட்டுள்ளதும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. சீன சர்வே கப்பலான Xiang Yong Hong 03 வங்காள விரிகுடாவில் பல வாரங்கள் தங்கியதுடன் ஒரு கட்டத்தில் சென்னைக்கு 380 நாட்டிகல் மைல் அருகே வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய பெருங்கடலில் சீன கப்பல்கள் உலா வருவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.