அமைச்சரான பிறகு, தனது வருமானம் முற்றிலும் முடங்கி விட்டதாகவும், மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை என்றும் கூறி இருக்கிறார் சுரேஷ் கோபி. பாஜக எம்பியும், மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி, தனக்கு பதிலாக வேறொருவரை அமைச்சராக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருப்பதால், கேரள பாஜகவில் குழப்பம் உண்டாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார் நடிகர் சுரேஷ் கோபி. தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கண்ணூரில் 12ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், தேர்தலுக்கு முந்தைய தினம் வரை அமைச்சராவதில் விருப்பமின்மையை வெளிப்படுத்தி வந்ததாகவும், அமைச்சரான பிறகு தனது வருமானம் வெகுவாக குறைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதோடு, மீண்டும் சினிமாவில் நடித்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறிய அவர், தனக்கு பதிலாக ராஜ்யசபா எம்பி சதானந்தனுக்கு, அமைச்சர் பதவி கொடுப்பது சரியானதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2016ல், பாஜகவில் உறுப்பினராக இணைந்த நடிகர் சுரேஷ் கோபிக்கு, 2024 தேர்தலின் போது, திருச்சூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றியும் பெற்றதால், மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான சதானந்தனை தனக்கு பதிலாக அமைச்சராக்கலாம் என்று கூறியுள்ளார் சுரேஷ் கோபி. சுரேஷ்கோபி, அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருப்பது கேரள பாஜகவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மலையாள சினிமாவைத் தவிர்த்து தென்னிந்திய சினிமாக்களில் பிசியாக நடித்து வந்த சுரேஷ் கோபி, மக்களவைத் தேர்தலில் வென்றாலும் தொடர்ந்து நடிக்கவே ஆசை என்று வெளிப்படுத்தி இருப்பது, கேரள பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.