தான்சானியா நாட்டில், தற்போது நடைபெற்று வரும் வன்முறையில் கிட்டத்தட்ட 700 பேர் இறந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், சிசிஎம் கட்சியை சேர்ந்த சமியா சுலுஹு ஹசன் (Samia suluhu hassan) 97% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டின. இதனால் எதிர்க்கட்சியினர் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவர்களை தடுக்க வந்த காவலர்களுடன், போராட்டக்காரர்கள் மோதியதால் பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, இந்த போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது. இந்த பதற்ற சூழல் காரணமாக, அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டது.இதற்கிடையே தெருக்களில் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 3 நாட்களாகவே நடந்து வரும் இந்த கலவரத்தில், இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர். தார் எஸ் சலாம் (Dar-Es-Salam) பகுதியில் 350 பேர் மற்றும் மவான்சா பகுதியில் 200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என, தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சூழ்நிலை கட்டுக்குள் அடங்கும் வரை, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறையால் அந்நாடே, போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.