கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து பேசினாலே பதறுகிறார் இபிஎஸ், அவர் பதறுவதற்கான காரணம் என்ன? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கூறி இருப்பதாவது: ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன், 2 மாதங்களுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தார். 1972 எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து, செங்கோட்டையன் அதிமுகவில் பயணிக்கிறார். அவர் 1977 முதல் அதிமுகவில் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலம் முதல் இப்போதுவரை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மட்டும் தான்.செங்கோட்டையன் பசும்பொன்னுக்கு வந்தது அரசியல் நிகழ்ச்சி கிடையாது. அவர், 10 நாட்களுக்கு முன்பு பசும்பொன்னுக்கு வருவதாக என்னிடம் சொல்லியிருந்தார், நானும் வாருங்கள் என சொல்லியிருந்தேன். ஜெயலலிதா பசும்பொன் வரும்போதெல்லாம் செங்கோட்டையன் தான் ஏற்பாடுகளை செய்வார். அதேபோல ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பம்பரம் போல செயல்படுவார் செங்கோட்டையன். பிரச்சாரத்துக்கு வரும்போது செங்கோட்டையன் வந்து பார்வையிட்டு ஒப்புதல் தந்தால் தான், ஜெயலலிதா நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே வருவார்.அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்ற நபரை கட்சியை விட்டு நீக்கும் தகுதி, இபிஎஸ்-க்கு இல்லை. செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தான் அழைப்பு விடுத்துள்ளார். பசும்பொன் வந்தபோது செங்கோட்டையன் அரசியல் பேசவில்லை. நான் தான் செய்தியாளர்களிடம் பேசினேன்.சசிகலா, ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் என்னை துரோகி என, இபிஎஸ் சொல்கிறார். ஆனால், அவர் தான் துரோகி. 2021 தேர்தலில் அமித்ஷா அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என முயற்சி செய்தார், நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால், இபிஎஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர்தான் துரோகி.முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வந்துசென்ற செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது, தென் தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்ந்த அவமானம். பசும்பொன்னுக்கு விருந்தினராக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியை சந்திப்பார்.திமுகவின் ‘பி’ டீம் என எங்களை சொல்கிறார் இபிஎஸ். ஆனால், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே இபிஎஸ் தான். ஆட்சியை காப்பாற்றிய பாஜகவுக்கு நன்றியோடு இருப்பதாக சொல்லும் இபிஎஸ், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி துரோகம் செய்தார். அவர் 2024 தேர்தலில் திமுகவுக்காக டம்மி வேட்பாளர்களை போட்டு 3ஆவது, 4ஆவது இடத்துக்கு, அதிமுகவை கொண்டு சென்றார்.ஜெயலலிதா என்னை கட்சியிலிருந்து நீக்கியது அனைவருக்கும் தெரிந்தது தான். அதன் பின்னர்தான் இபிஎஸ், என்னை துணைப் பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டு ஆர்கே நகரில் தொப்பி சின்னத்தில் எனக்கு வாக்கு கேட்டார். எடப்பாடி பழனிசாமியை நாங்கள் வீழ்த்த தேவையில்லை, அவர் செய்த துரோகமே அவரை வீழ்த்தும்.2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும், அமமுகதான் அதற்கான ஆயுதம். கொடநாடு கொலை வழக்கு பற்றி பேசினாலே இபிஎஸ் பதறுவது ஏன்? அரக்கர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே அழிவை சந்திப்பார்கள், 2026ல் சூரசம்ஹாரம் நடக்கும், இபிஎஸ் வீழ்த்தப்படுவார். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதற்கு சுயநலமும், பதவி வெறியும் தான் காரணம்.இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - TTV Dhinakaran Speech | "கொடநாடு பற்றி பேசினால் EPS பதறுகிறார்" TTV தினகரன் | Kodanad Case