உத்தரப்பிரதேசத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனை மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் வசித்து வரும் சந்தோஷ் எனபவருக்கு திருமணமாகி மூன்று மகள்களும், அமித் என்ற மகனும் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் 20 வயதேயான மகன் அமித்துக்கு - ஜோதி என்ற பெண்ணுடன் நீதிமன்றத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. திருமனத்திற்கு பின்னர் அமித்தும் - ஜோதியும் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சித்தார்த் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்னர் ஜோதியிடம் தனக்கு வேலை இருப்பதாக கூறிய அமித் நாட்கள் பல ஆகியும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துக்கொண்டு ஆன்லைன் கேம் , ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி வந்துள்ளார். மகனுக்கு புத்திமதி சொல்ல வேண்டிய தந்தையும் கண்டுக்கொள்ளாத நிலையில் அவ்வப்போது மகனின் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியை மட்டும் செய்து வந்துள்ளார். இருப்பினும் வேலைக்குச் செல்லும் எண்ணமே இல்லாத அமித் சூதாட்டங்களுக்கு அடிமையாகி இருந்த நிலையில் நாள்தோறும் மனைவி ஜோதியிடம் பணம் , நகை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் ஜோதி சேர்த்து வைத்திருந்த சேமிப்பு பணம், அவருடைய மீதி நகைகளை சூதாட்டத்தில் வைத்து பறிகொடுத்த அமித் இறுதியாக விளையாட்டிற்கு பணையம் வைப்பதற்கு ஜோதியின் மாங்கல்யத்தைக் கேட்டு சண்டையிட்டுள்ளார்.அப்போது மகன் வீட்டுக்கு வந்திருந்த சந்தோஷ் இருவருக்குமிடையே சமாதானம் பேசி அனுப்பி வைத்ததையடுத்து இரவு மூவரும் உறங்கச் சென்றுள்ளனர். நள்ளிரவில் திடீரென வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த மாமனார் சந்தோஷை அழைத்த ஜோதி யாரோ அமித்தை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் அக்கம்பக்கத்தினர் உதவியோடு உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் உள்ளே வெளிநபர் வந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாத நிலையில் , அமித்தின் உடலை சோதனை செய்ததில் அவரது கழுத்தில் தடையங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் ஜோதியிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் தான் தான் அமித்தை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.