புதுச்சேரியில், நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்த சீமான் செய்தியாளர்களிடம் ஒருமையில் ஆபாசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான கேள்வியால் உண்டான வாக்குவாதத்தில், சீமானின் அணுகுமுறை அங்கிருந்தவர்களை முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது. சீமான் டென்சனுக்கு யார் காரணம்? நடந்தது என்ன? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...எப்போதும் உணர்ச்சிப் பெருக்குடனும் ஆக்ரோஷமாகவும், நரம்பு புடைக்க பேசும் சீமான், கொஞ்சம் தூக்கலாக பேசி செய்தியாளரிடம் கடுகடுத்துள்ளார். ஆவேசத்தில் நிதானமிழந்து என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் வாய்விட்டுவிட்டு, பலரது கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறார் சீமான்.புதுச்சேரியில், கட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். சீமான் என்றதும் அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டு காத்திருந்த செய்தியாளர்களும், விஜயின் தேர்தல் வாக்குறுதி முதல் எஸ்.ஐ.ஆர் வரை கேள்விகளை வீசிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக கோவையில் உள்ள ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகளை சீர்செய்யாமலும் அடிப்படை வசதிகளை செய்து தராமலும் மெட்ரோ ரயில் சேவை என்பது தேவையற்றது என்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் மெட்ரோ ரயில் வந்தால் வளர்ச்சி தானே என்றதும் அவருக்கும் சீமானுக்கும் இடையே விவாதம் பற்றி, செய்தியாளர் சந்திப்பே பரபரப்புக்குள்ளானது.சீமான் சற்று சூடானதும் சுதாரித்துக் கொண்ட மற்ற பத்திரிகையாளர்கள், உடனடியாக அவரை திசைதிருப்பும் நோக்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், மம்தா மக்களை திரட்டி போராட்டம் நடத்தியதாகவும், திமுக அரசு பூத் லெவல் ஆஃபிசரை நியமித்து கணக்கெடுப்பை நடத்தி வருவதாகவும் கூறினார்.அப்போது குறுக்கிட்டே அதே செய்தியாளர், தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் சொன்னால் மாநில அரசு செய்துதானே ஆக வேண்டும் என விளக்கம் கூறினார். இதனால், கோபத்தின் உச்சாணி கொம்பிற்கே சென்ற சீமான், உனக்கென்னடா பிரச்னை, பைத்தியமா நீ என ஒருமையில் பேசி ஆவேசத்துடன் எழுந்து நின்று வாக்குவாதம் செய்ய தொடங்கினார். ஏய்... வா... போ என தன்னிலை மறந்து பேசிய சீமான், ஒருகட்டத்தில் தனிநபர் தாக்குதலை தொடங்கினார். மைக்கையும் கேமராவையும் தூக்கிக் கொண்டு வந்தால் நீ என்ன பெரிய வெங்காயமாடா என்ற சீமான், அருகில் பெண் அமர்ந்திருப்பதை கூட மறந்து ஆபாசமாக பேசி முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்டார். சீமானின் இந்த செயலை சற்றும் எதிர்ப்பார்க்காத செய்தியாளர்கள், அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர். ஒருவழியாக செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த நிலையில், சீமானை சூடேற்றிய அந்த செய்தியாளரை குறிவைத்து பின் தொடர்ந்த நாம் தமிழர் கட்சியினர் வெளியே சென்று அவரை தாக்கும் நோக்கில் சூழ்ந்துகொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், செய்தியாளரை மீட்டு பாதுகாப்பாக, அனுப்பி வைத்தனர்.