சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பொறியாளரிடம் நான்கரை கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் சிக்கியது.போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி மோசடி செய்த கும்பல் சிக்கியது எப்படி? மோசடி நடந்தது எப்படி?சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் 72 வயதான ஓய்வு பெற்ற பொறியாளரின் செல்போன் எண்ணுக்கு வந்த வாய்ஸ் காலில், இன்னும் இரண்டு மணிநேரத்தில் செல்போன் எண் செயலிழந்து விடும் என்று கூறப்பட்டது. மேலும் தகவலுக்கு எண் 9-ஐ அழுத்துமாறு கட்டளையிடவே ஆதார், வங்கி கணக்கு, கேஸ் சிலிண்டர் இணைப்பு என அனைத்தையும் அந்த செல்போன் எண்ணுடன் இணைத்துள்ளதால், பதறிபோன அவர், 9 என்ற எண்ணை அழுத்தியுள்ளார். இதனையடுத்து செல்போனில் பேசிய மர்ம நபர், ஓய்வு பெற்ற பொறியாளரிடம் உங்களது செல்போன் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு ஹவாலா பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், இதனால் உங்கள் மீது மும்பை மற்றும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி, அழைப்பை மும்பை போலீஸுக்கு இணைப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, போலீஸ் அதிகாரி போல் பேசிய நபர், உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதோடு, பெடக்ஸ் கொரியர் மூலம் கடத்த முயன்ற சட்டவிரோதமான போதை பொருட்கள், போலி பார்போர்ட், 257 ஏ.டி.எம் கார்டு, புலி தோல் ஆகியவை அடங்கிய பார்சல் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு மணி நேரத்தில் மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் வரவில்லை என்றால் கைது செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த முதியவர், தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என கேட்க, விசாரணைக்கு வீடியோ கால் மூலம் ஒத்துழைத்தால் போதும், விடுவித்து விடுகிறோம் என அந்நபர் நம்ப வைத்துள்ளார். ஆனால் வீட்டில் யாரும் இல்லாத இடத்தில் இருந்து வீடியோ கால் செய்யும் படியும் கூறியுள்ளார். அதன்படியே முதியவரும் வீடியோ கால் செய்ததாக கூறப்படும் நிலையில், வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெறுள்ளதா என ஆராய வேண்டும் என்பதால், தற்போது அக்கவுண்டில் உள்ள பணம் அனைத்தையும் RBI அக்கவுண்டிற்கு அனுப்புமாறு மர்ம நபர் கூறியுள்ளார். மீண்டும் 30 நிமிடங்களில் பணம் உங்களது வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும் என கூறியதை நம்பிய முதியவர், தனது அக்கவுண்டில் இருந்து 4 கோடியே 67 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி நபர் கூறிய கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய சில மணி நேரத்திலேயே, அழைப்பு துண்டிக்கப்பட, மீண்டும் அழைத்த போதுஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த முதியவர், போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் உத்தவின்பேரில், தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்ட போலீசார், செல்போன் எண், மெயில் உள்ளிட்ட தகவல்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட வில்லிவாக்கம், மற்றும் திருவல்லிக்கேணியை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 53 லட்சம் பணம், மோசடி செய்ய பயன்படுத்திய செல்போன்கள், செக்புக், ஏ.டி.எம் கார்டுகள், பாஸ்புக் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை கைபற்றியதோடு 13 பேரை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள், மோசடி செய்து பெறும் பணத்தை ஹவாலா மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி, அதற்கு நிகரான கிரிப்டோ கரன்ஸிகளை பெற்று, மாட்டிக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், அதிக லபத்திற்காக போலியான விளம்பரங்கள், முதலீட்டு செயலிகள் மற்றும் வலைதளங்களை நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள காவல் ஆணையர் அருண், மோசடி காரர்களுடன் சேர்த்து பண பரிவர்த்தனை செய்பவர்களும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.