தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த விளை பயிர்கள் வீணானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சிலரது வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதால், பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.நெல்லை: அம்பை சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தரையில் சாய்ந்து வீணானது. தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மயிலாடுதுறை: கஞ்சாநகரம், மேல கஞ்சாநகரம், பொன்னுக்குடி, கருவாழக்கரை உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில் பூவேந்திரன் ஆறு பாசன வாய்க்கால் 3 ஆண்டுகளாக முறையாக தூர் வாரப்படாததால் தண்ணீரை தங்களால் விவசாய நிலங்களில் இருந்து வடிய வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மழையில் இடிந்து விழுந்த சுவர்கள்:மயிலாடுதுறையில் விடாது பெய்த கனமழையால் முரளி மற்றும் கண்ணன் ஆகிய இருவரது வீட்டு சுவர்கள் அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதில் கண்ணனும், முரளியின் மனைவியும் காயமடைந்தனர். இதையடுத்து இருவரது வீட்டில் உள்ளவர்களும் பாதுகாப்பாக இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.தஞ்சாவூர்: நல்ல வன்னியன் குடிகாடு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை பயிர்கள் முற்றிலும் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.திருவாரூர்; தொடர் கனமழையால் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட அழகிரி காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள்கூட நனைந்து வீணாகிவிட்டதாக மக்கள் கவலை தெரிவித்தனர். மதுரை; தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு செல்லூர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை முழுவதிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.விருதுநகர்: தேசிகாபுரத்தை சேர்ந்த சீதை என்ற மூதாட்டியின் வீட்டு ஒரு பக்க சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக மூதாட்டி காயமின்றி உயிர் தப்பினார்.