தமிழகத்தில் வரும் 2-ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 2ஆம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.