அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நடத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ நடத்துவதற்கான வரைவு வழிகாட்டு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று, அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.