தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தவெக அல்லோலப்பட்டு வரும் தகவல் அக்கட்சியினரை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தங்களின் ஒற்றை நம்பிக்கையாக இருந்த புதுவை முதல்வர் ரங்கசாமியும், கம்பிநீட்டிய நிலையில், தவெகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு இனி யாருடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்பது கேள்வியாக உள்ளது.புதுவை முதலமைச்சர் ரங்கசாமியின் செய்தியாளர் சந்திப்பு தான் ஒட்டுமொத்த தவெகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பழைய கூட்டணியை உறுதி செய்தும், புதிய கூட்டணியை இறுதி செய்தும் வருகின்றன. அரசியலுக்கு புதிய வரவான தவெக கூட்டணிக்கு கட்சிகள் கிடைக்காமல் தவித்து வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவதாக கூறி, கூட்டணிக்காக வீசப்பட்ட வலையில், ஓராண்டாகியும் எந்த கட்சியும் சிக்காதது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற தவெகவின் சூட்சுமத்தை புரிந்துகொண்ட திமுக, தனது கூட்டணி கட்சிகளை தன்னுடனே வைத்திருக்கும் வேலைகளை முடுக்கிவிட்டு அதை சாத்தியப்படுத்தியும் காட்டிவிட்டது. ஆரம்பத்தில் விஜயின் கருத்தை தான் தாங்களும் பல ஆண்டுகளாக சொல்லிவருவதாக கூறி தவெகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய விசிக, பின்னாளில் தற்போதைக்கு அதிகாரத்தில் பங்கு கேட்கப்போவதில்லை என கூறி, ரிவர்ஸ் எடுத்து கம்பி நீட்டியது.அடுத்ததாக காங்கிரஸை டார்கெட் செய்த விஜய், டெல்லி லாபியை பயன்படுத்திக் கொண்டு கூட்டணியில் சிக்க வைக்கலாம் என பிளான் செய்த நிலையில், ஒரே போடாக திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்த குழுவையே அமைத்து ஷாக் ட்ரீட்மெண்ட் தந்தது காங்கிரஸ் தேசிய தலைமை. ஆளும் கட்சியின் கூட்டணியை உடைக்க முடியாமல் பெருத்த ஏமாற்றமடைந்த விஜய், அதிமுக - பாஜக கூட்டணிக்கு போவோமா, வேண்டாமா? என இரட்டை நிலைப்பாட்டில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளை வளைக்க பார்த்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த இரு கட்சிகளும் வரும் தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் எனும் போது, புதிய கட்சிகளை நம்பி கூட்டணி வைக்க இருதரப்பும் தயாராக இல்லை என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் செங்கோட்டையனின் வருகை தவெகவினருக்கு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டியது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் இருந்தவர், பல தேர்தல்களில் அதிமுக கூட்டணியை கட்டமைத்தவர் என்பதால், எப்படியாவது தவெக தலைமையில் வலுவான கூட்டணியை ஏற்படுத்துவார் என தவெகவினர் அசாத்திய நம்பிக்கையோடு காத்திருந்தனர். இதற்கு, அறிகுறியாக டிடிவி மற்றும் ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்குள் இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்குள்ளாகவே தவெக முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக, இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் பாஜக கூட்டணிக்குள் சேர்க்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இப்படி தமிழ்நாடு அரசியல் களம் தந்த பேரதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத தவெகவின் தற்போதைய ஆறுதலும் அடைக்கலமும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தான் என விஜயை காத்து வருபவர்களால் சொல்லப்பட்டு வந்தது. அண்மையில், புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜயும் முதல்வர் ரங்கசாமியை விமர்சிக்காமல் அவருக்கு நன்றி தெரிவித்த கையோடு, அவருடன் கூட்டணியில் உள்ள பாஜகவை விமர்சித்ததும் கூட்டணி கணக்கை ஊர்ஜிதப்படுத்தியது. விஜய் பேச்சை யூட்யூப் நேரலையில் ரங்கசாமி ரசித்து கேட்ட வீடியோவும் வெளியாக விர்ச்சுவல் வாரியர்ஸ் அடுத்த ஆட்சி தவெக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் என கனவுக்கடலில் மிதந்து கொண்டிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தன்னை நம்பியவர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறார் ரங்கசாமி. பாஜக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின் புதுச்சேரிக்கு வந்திருந்த சூழலில், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, வரும் தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி தொடரும் என கூறி, தவெகவினரை கண்ணீர் கடலில் தத்தளிக்க வைத்திருக்கிறார்.புதிய கட்சி என்பதால் தவெகவை நம்பி எந்த கட்சியும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என சொல்லப்படும் சூழலில், செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்படுவதாக கூறப்படும் கூட்டணி பேச்சுவார்த்தை குழு யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.