’Celebrating Idli’ எனக் கொண்டாடும் வகையில், கூகுள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசு பொருளாகி இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை உலகிற்கே நினைவுபடுத்தும் வகையில், உணவுப் பண்பாட்டை உலக மேடையில் வலியுறுத்தும் முயற்சியாகவும், இது பார்க்கப்படுகிறது.இன்றைய கூகுள் டூடுல், உலகம் முழுவதும் தமிழர் அடையாளமாகக் கருதப்படும், அரிசியும் உளுந்தம் பருப்பும் சேர்த்து தயாரிக்கப்படும் சுவையான தென்னிந்திய உணவான இட்லியை கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. கண்களைக் கவரும் இந்த டூடுலை வெளியிட்ட கூகுள் என்ன கூறியிருக்கிறது தெரியுமா?”இன்றைய கூகுளின் அதிகாரபூர்வ டூடுலானது தென் இந்திய உணவான இட்லியைக் கொண்டாடுகிறது. இது, அரிசி, உளுந்து சேர்த்து அரைத்து நொதிக்க வைத்த மாவில் தயாரிக்கப்படும் பதார்த்தம் ஆகும்"இவ்வாறு கூகுள் சுட்டிக்காட்டி உள்ளது. கூகுள் டூடுல் என்பது, பிரபல தலைவர்களை நினைவு கூர, முக்கிய தினங்கள், ஏதேனும் முக்கிய நிகழ்வுகளை பாராட்ட வெளியிடப்படும். சில நேரங்களில் கலாச்சாரங்களைக் கொண்டாடவும் வெளியிடப்படும். இந்த வரிசையில், இன்று தென்னிந்திய உணவுக் கலாச்சாரமான இட்லியைக் கொண்டாடும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள். கூகுள் லோகோ முழுவதுமே வெண்மையான இட்லி, இட்லி மாவு நிறைந்த பாத்திரம், இட்லியை வேக வைத்தல், அதற்கு தொட்டுக் கொள்ளப்படும் சட்னி, சாம்பார், இட்லிப் பொடி என அலங்காரமாகக் காட்சியளிக்கிறது. இது, வாழை இலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அரைத்த மாவு புளிப்பதில் ஆரம்பித்து, இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் வேக வைக்கும் வரை உள்ள அனைத்து கட்டங்களையும் அழகான சித்திரமாக கூகுள் நேர்த்தியாக வடிவமைத்துள்ளது.இட்லி என்பது வெறும் உணவல்ல, ஒரு பாரம்பரியம், அடையாளம், ஒரு கலாச்சாரத்தின் சின்னம். கூகுளின் இந்த டூடுல் அங்கீகாரம், அந்த அடையாளத்தை உலகளவில் மேலும் வலுப்படுத்தும் வகையில் உள்ளது. பொதுவாக, உலக இட்லி தினமான மார்ச் 30ஆம் தேதி, இத்தகைய டூடுல் வெளியிடப்படுவது வழக்கம், ஆனால், தொடர்பே இல்லாத அக்.11ஆம் தேதியான இன்று, இட்லிக்கு டூடுல் வெளியிடப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. இட்லியை கொண்டாடுவோம்... கூகுளையும் தான்...