இந்தியாவின் டாப் தொழிலதிபரான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். ரத்தன் நேவல் டாடா,சூரத் நகரில் 1937-ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் பிறந்தார். 10 வயதில் பெற்றோரை பிரிந்து தனது பாட்டி நவாஜ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்ட இவர், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டமும், ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டமும் பெற்றார். 1962-ஆம் ஆண்டு தனது 25ஆவது வயதில், டாடா குழுமத்தில் இணைந்தார்.தனது தொழில் வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்த ரத்தன் டாடா, சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து, பல ஆண்டு அயராத உழைப்பிற்கு பிறகே உயர் பதவியை ஏற்றார். 1971-ல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த தி நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியின் பொறுப்பு இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது ஆலோசனைகளால் அந்நிறுவனம் நெருக்கடியிலிருந்து மீண்டது. 1991-ம் ஆண்ல் டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்ற பின், அந்த நிறுவனம் அசுர வளர்ச்சியை அடைந்தது. ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது டாடா குழுமம். இந்தியாவை மையமாகக் கொண்ட டாடா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றிய பெருமை ரத்தன் டாட்டாவுக்கு உண்டு. மேலும் இவருடைய நிர்வாகத்தின் கீழ் டாட்டா குழுமம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது.குறிப்பாக டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்சை மத்திய அரசு நாட்டுடைமையாக்கி ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதனை 2020-ம் ஆண்டில் டாடா நிறுவனம் மீண்டும் வாங்கியதில் ரத்தன் டாடா பெரும் பங்காற்றினார்.நடுத்தரக் குடும்பத்தினர் ஒரு பைக்கில் 4 பேராக கஷ்டப்பட்டுப் போவதைப் பார்க்கும்போதெல்லாம், குறைந்த விலையில் சிறிய கார் தயாரிக்க வேண்டும் என்ற உந்துதல் இவரிடம் ஏற்பட்டது. அந்த கனவை, ‘டாடா இண்டிகா’ வடிவில் 1998-ல் நிஜமாக்கினார். பின்னர் இவரது முயற்சியில் உருவாகி, 2008ஆம் ஆண்டில் வெளியான, டாடா நானோ என்ற உலகின் மிகவும் மலிவு விலை கார் இந்திய சாலைகளில் சீறிப்பாய்ந்தது.இவ்வாறு பல சாதனைகளையும், தொழில் புரட்சியையும் நிகழ்த்திய ரத்தன் டாடா, இந்தியா பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத சக்தியாகவே உருவெடுத்தார். தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷன், விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார்.வணிகம் மட்டுமல்லாது மனிதநேயத்திலும் முத்திரை பதித்தவர் ரத்தன் டாடா. நம் நாட்டில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவிய காலத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாயை நன்கொடையாக அறிவித்து அனைவரையும் வியக்க வைத்தார். இந்த சமயத்தில் அவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகைகள், சம்பளத்தை முறையாக வழங்கினார்.பிசினஸில் ஈடுபட்டு கோடிகளைக் குவித்த ரத்தன் டாடாவால், உலக பணக்காரர்கள் பட்டியலில் மட்டும் ஏதோ இடம் பிடிக்க முடியவில்லை. காரணம், டாட குழுமத்தின் வருவாயில் 66 சதவீதம், அந்த குழுமத்தால் நடத்தப்படும் அறக்கட்டளைக்கே சென்று விடும். டாடா அறக்கட்டளை என்பது நீண்ட காலமாக கல்வி, சுகாதாரம் மற்றும் பிற தொண்டு நிறுவன சேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயன் பெற்றவர்கள் ஏராளம்.பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் பட்டித்தொட்டி எங்கும் அவரது புகழ் பரவி கிடக்கிறது. ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் மீது அக்கறையுடனே வாழ்ந்து தமது சகாப்தத்தை முடித்து கொண்டவர் தான் ரத்தன் டாடா.