ஜெர்மனி வாழ் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்து, வரவேற்பில் அகம் குளிர்ந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உரிமையோடும், நம்பிக்கையோடும் தமிழ்நாட்டுக்கு வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களையும் அழைத்து வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற, மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;பல ஆயிரம் கிமீ கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கும்போது ஏற்படும் இந்த மகிழ்ச்சி தான், உண்மையான தமிழ்ப் பாசம், தமிழினப் பாசம்.உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும், தமிழன் இருப்பான், தமிழ்க் குரலைக் கேட்கலாம் என்று சொல்லும் அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம் தான், தமிழினம். ஜெர்மனி நாட்டில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றபோது மகிழ்ச்சி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க இடத்தில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மகிழ்ச்சி, பெருமை அடைகிறேன்.திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறோம். இந்த வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று தான் முதலீட்டாளர் மாநாடு, முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறேன். ஜெர்மனிக்கு வந்த உடனேயே முதலில் உங்களை சந்திப்பதற்கு வந்துவிட்டேன். இப்போது உங்களுடைய ஆரவாரத்தை கேட்கும்போது மகிழ்ச்சியை பார்க்கும்போது, நொடியில் தமிழ்நாட்டிற்கு பயணித்த உணர்வு ஏற்படுகிறது. மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வேர் இருக்கும் தாய் நிலத்தை மறக்க மாட்டான்.உங்கள் மீது உள்ள அன்போடும், உரிமையோடும் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். உங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்கு நீங்கள் செய்யுங்கள், செய்வீர்கள், செய்து கொண்டிருப்பீர்கள்.நீங்கள், சிறிய தொழில் செய்து கொண்டிருந்தாலும், உங்கள் தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்யவேண்டும். பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கிற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, நம்முடைய தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கம் கொடுங்கள். தமிழ் மண்ணையும், மக்களையும் மறக்காதீர். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு குழந்தைகளுடன் வாருங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை, மாற்றத்தைப் பாருங்கள். நம்முடைய பண்பாட்டை, வரலாற்றை, அரசியல் எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம், கலைஞர் உலகம் என்று ஏராளமான இடங்கள் உள்ளன. இதையெல்லாம் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளுக்கும் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் உறவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, இந்த நான் உங்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.