திருப்பூரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் உரிய ஆவணங்களின்றி வசித்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் கொலை கொள்ளையை அரங்கேற்றி விட்டு,இந்தியாவிற்குள் ஊடுருவியர்கள். தொழில் நகரமான திருப்பூரில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்ததும் அவர்களுக்கு திருப்பூரை சேர்ந்த இடைத்தரகர் போலி ஆதார் கார்டுகளை பெற்று தந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வங்கதேசத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள் கடந்த சில தினங்கள் முன் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வங்கதேச இளைஞர்கள் பதுங்கி உள்ளனரா என காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வெங்கமேடு பகுதியில் தங்கியிருந்த தன்வீர் அகமது அவரது மாமாவுடன் ஏற்பட்ட தகராறில், அவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து விட்டு இந்தியாவிற்குள் ஊடுருவி தனது மனைவி மற்றும் நண்பருடன் கோபிச்செட்டிப்பாளையம் வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததது தெரிந்தது. பின் வங்கதேசத்தை சேர்ந்த மம்முல் என்பவரின் உதவியுடன் கடந்த 7 மாதங்கள் முன் திருப்பூர் வந்தவர்கள் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது, அவர்களுக்கு திருப்பூர் முகவரியில் ஆதார் கார்டு எடுத்துக் கொடுத்தது இடைதரகர் மாரிமுத்து என்பது தெரியவர அவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மேலும் 3 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு தினங்களில் மட்டும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கி இருந்த 12 வங்கதேச இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்குள் ஊடுருவிய இவர்களுக்கு எந்த ஆவணங்களும் இன்றி, திருப்பூரில் நிரந்த முகவரியாக ஆதார் அடையாள அட்டை பெற்றுக்கொடுத்த இடைத்தரகர் மாரிமுத்து, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் பெற்றுத் தந்துள்ளது தெரியவந்துள்ளது.ஆதார் அட்டையில் ஓர் சிறு திருத்தம் என்றால் அலையாய் அலை வேண்டியுள்ள நிலையில், இடைத்தரகர் மாரிமுத்து வெளிநாட்டினருக்கு எந்த ஆவணங்களுமின்றி எப்படி ஆதார் பெற்று கொடுத்தார் ?யார் இந்த மாரிமுத்து ? என துப்பு துலக்கியதில் பல தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் பலருக்கும் மனு எழுதித் தருபவராக உள்ளே மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த மாரிமுத்து, சில ஆண்டுகளில் அதிகாரிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. ஆதாருக்கு பிரதானமாக இணையத்தில் இருப்பிடச் சான்று இணைக்க, பச்சை நிறத்தில் கையெழுத்திடும் அரசு அலுவலர்களின் அதிகாரப்பூர்வ கடிதம் பெறுவதற்கு அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு அழைத்து வரும் ஏஜெண்டுகள் ஆதார் அட்டைக்கு அணுகினால், சற்று பணத்தை குறைத்து கொள்ளும் மாரிமுத்து, கொல்கத்தா என்றால் தொகையை கூட்டி 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் ஈடுபட்டும் தெரியவந்ததுள்ளது. இது தொடர்பாக பேசிய திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் சுஜாதா, இடைதரகர் மாரிமுத்துவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமிருந்து பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். இடைதரகர் மாரிமுத்துவிடம் ஆதார் அட்டை பெற்றவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக கூறியவர், பனியன் நிறுவனங்கள் வேலைக்கு சேரும் நபர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு பணியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.