உத்தரப்பிரதேசத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து ஓடும் வேனில் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான சட்டங்கள் இருந்தும், நாடு முழுதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு வட இந்தியாவில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு....உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, வீட்டில் பெற்றோர்களிடம் கூறிவிட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வேனில் வந்த சிறுவர்கள் மூன்று பேர் பாட்டில் தண்ணீர் கொடுத்துள்ளனர். சிறுமியும் எதையும் யோசிக்காமல் தண்ணீரை குடித்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு தலை சுற்றி மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதற்கான சமயம் பார்த்து காத்திருந்த சிறுவர்கள் , அந்த சிறுமியை வேனில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே, வேனிலேயே வைத்து 3 பேரும் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை ஒரு மேம்பாலத்தின் அருகே தள்ளி விட்ட சிறுவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த சிறுமி அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு பயங்கரமாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் சிறுமி கூறியிருக்கிறார். உடனடியாக அவர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.பின்னர் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்போது, போக்சோ, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களுள் இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.