கரூரில், த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, பலியானவர்களின் குடும்பத்தினரை, சென்னைக்கு வரவழைத்து சந்தித்த விஜய், கண் கலங்கி வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாழ் நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி அளித்த விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு திருமண உதவி, படிப்பு செலவு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்டவர்களை, சென்னைக்கு அழைத்து சந்தித்த விஜய்யின் செயல், தமிழக அரசியல் களம், இதுவரை பார்க்காத, நடக்காத நிகழ்வாக அரங்கேறி இருக்கிறது. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம் ஆகி விட்டது. கடந்த மாதம், கரூர் கண்ணீர் கடலில் மூழ்கியிருந்ததை யாரும் மறக்கவே முடியாது. சொந்தங்களை இழந்தவர்கள் துடிதுடித்துக் கொண்டிருந்த காட்சி, இன்னும் கண் முன்னாடி நிற்கிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து விஜய் சந்தித்து பேசியிருக்கிறார். விஜய்யை சந்திக்க 5 சொகுசு பேருந்துகள் மூலம் கரூரில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டவர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவே, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.38 குடும்பத்தை சேர்ந்த 41 பேர் பலியான நிலையில், அதில் ஒரு குடும்பத்தை தவிர 37 குடும்பத்தினரும் வந்திருந்ததாக கூறப்படுகிறது. தனியார் நட்சத்திர ஹோட்டலிலேயே அனைவருக்கும் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், காலை 9 மணியளவில் கரூர் மக்களை சந்திக்க ஹோட்டலுக்கு வந்தடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்.பாதிக்கப்பட்ட மக்களை ஒரு அரங்கத்தில் அமர வைத்திருந்ததோடு, ஒவ்வொரு குடும்பத்தினருடமும் தனித்தனியாக சந்தித்து பேசினார் விஜய். முதலில் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒரு படிவத்தை கொடுத்து என்னென்ன உதவி தேவைப்படுகிறது என எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொண்ட விஜய், வருங்காலங்களில் திருமண உதவி, கல்வி உதவி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 5 ஆயிரத்து 849 ப்ரீமியம் தொகையில் காப்பீடு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் போது, கண் கலங்கிய விஜய், அந்த குடும்பத்தினரை பார்த்து அழுததாக கூறப்படுகிறது. ’சென்னைக்கு அழைத்து வந்ததற்கு மன்னித்து விடுங்கள்’ என மன்னிப்பு கோரியதாக சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்த பிறகும் கூட தாம் அழைத்ததற்காக சென்னைக்கு வந்து இருப்பதாக கூறி, உணர்ச்சி வசப்பட்ட விஜய், வாழ்நாள் முழுவதும் இந்த அன்புக்கு கடமைப்பட்டு இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு, என்ன உதவியாக இருந்தாலும் செய்து கொடுக்க தயாராக இருப்பதாக வாக்குறுதி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த எழுத்துப் பூர்வமான கோரிக்கையை நிர்வாகிகளிடம் கொடுத்து உடனடியாக நிறைவேற்றும் பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.அப்போது, மனைவி, 2 பிள்ளைகள் என மூன்று பேரையும் கூட்ட நெரிசலில் பலி கொடுத்த நபர், விஜய்யை சந்திக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு அழுது கொண்டே காலில் விழ முற்பட்ட நிலையில், உடனடியாக தடுத்து நிறுத்திய விஜய், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. தன்னால் தான் உங்கள் குடும்பத்தையே இழந்து விட்டீர்கள் என கண் கலங்கி ஆறுதல் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பின்னர் தான் அடுத்தகட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று நினைத்ததாக கூறிய விஜய், உங்களை சந்திக்காமல் என்னால்வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை என வருத்தத்தை பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது.காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஒவ்வொரு குடும்பத்தினிரிடமும் தனித்தனியாக விஜய் பேசினார். விஜய்யை சந்தித்த சுமார் 10 குடும்பத்தினர் பிற்பகலிலேயே கரூருக்கு புறப்பட்ட நிலையில், சந்திப்பு நிறைவுக்கு பிறகு எஞ்சியவர்களும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதையும் பாருங்கள்... விஜய் ஆறுதல் தெரிவித்த நிகழ்வில் என்ன நடந்தது?உருக்கமாக பேசிய நபர்.. | TVK Vijay | Karur people