வறட்சியால் விவசாயம் பாதிப்பு, பயிர்கள் கருகியதால் வறுமையால் எலிக்கறி சாப்பிடும் விவசாயிகள் மற்றும் விவசாயி தற்கொலை என நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அந்த நிலை இல்லாவிட்டாலும், விவசாயிகளுக்கான பாதிப்பு மட்டும் மாறாத சோகமாக உள்ளது. குறுவை விளைச்சல் அமோகமாக இருந்தபோதும், கொள்முதல் செய்வதில் அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் உள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்திருக்கும் காட்சிகள் தான், சோகத்தின் உச்சம். திருவாரூர்: மன்னார்குடி அருகே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்க தொடங்கியதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்தனர். வேர்க்குடி, செருமங்கலம், அண்ணுக்குடி, வடுவூர், காரிக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அரசு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாததால், மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. மேலும், நெல் மூட்டைகளில் பூஞ்சைகள் பூத்துள்ளன. தஞ்சாவூர்: பாபநாசத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன. வேளாண் துறையின் சரியான திட்டமிடல் இல்லாததே, நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்கு காரணம் என குற்றம் சாட்டும் விவசாயிகள், குறுவை சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள், சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளதாக விரக்தியடைந்துள்ளனர். கடலூர்: விருத்தாசலத்தில் அரசு சேமிப்பு கிடங்குக்கு, நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரிகள் மழையில் நனைந்ததால், மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. அரசு கிடங்குகளில் 10 நாட்களுக்கும் மேலாக காத்து கிடக்கும் லாரிகளில் இருந்து உரிய காலத்தில், நெல் மூட்டைகளை இறக்காததே பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் லாரி ஓட்டுநர்கள்.திருச்சி: திருவெறும்பூர் அருகே பத்தாளபேட்டை பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், திறந்தவெளி மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கொள்முதல் நிலையத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததே, இந்த பாதிப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினர் விவசாயிகள். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமடைவது ஒருபுறம் என்றால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக மறுபுறம் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புளியஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. தொடர் மழையால் அறுவடைப் பணிகள் தடைபட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றாவிட்டால் பயிர்கள் அழுகிவிடும் என புலம்பினர்.