நியூயார்க் நகரின் புதிய மேயராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமியரான ஜொஹ்ரான் மம்தானி பொறுப்பேற்றுக் கொண்டது அமெரிக்க அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஜனநாயக கட்சியை சேர்ந்த மம்தானிக்கு எதிராக வலதுசாரியான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரச்சாரம் கை கொடுக்காத நிலையில், மம்தானியின் வெற்றி டிரம்புக்கு தலைவலியாக மாறியிருக்கிறதா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.அமெரிக்காவில் துரும்பு அசைந்தாலும் அகிலமும் அதிர்வு தெரியும் என சிலர் பேச்சுக்கு சொல்வதுண்டு. அது மாதிரி தான் நியூயார்க் நகர மேயர் தேர்தலும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.அமெரிக்காவில், சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நியூயார்க் நகர மேயராக 34 வயதே ஆன ஜொஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றிருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி, ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் பிறந்தார். தனது 7 வயதில் தாய், தந்தையுடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த மம்தானி, தற்போது அந்த நாட்டின் மிக பெரிய நகரமான நியூயார்க்கின் மேயர் என்ற அதிகாரம் படைத்த பதவியை கைப்பற்றியிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற மம்தானி, நியூயார்க்கில் அமைந்துள்ள கைவிடப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மன்ஹாட்டன் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் வைத்து மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். இஸ்லாமியர்களின் புனித நூல் குர்-ஆன் மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றுக் கொண்டார் மம்தானி. அந்த வகையில், நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மேயர், தெற்காசியாவை சேர்ந்த முதல் மேயர் என்ற பெருமையை பெற்ற மம்தானி, நியூயார்க் நகரின் முதல் இளம் மேயர் என்ற பெருமைக்கும் சொந்தகாரர் ஆகியிருக்கிறார். இந்நிலையில், மம்தானியின் வெற்றி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு விடுக்கப்பட்ட சவாலா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், நியூயார்க் நகர தேர்தலின் போது, மம்தானி ஒரு ஹமாஸ் ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம்சாட்டிய டிரம்ப், மம்தானிக்கு வாக்களிக்கவே கூடாது என பிரச்சாரம் செய்தார். அதோடு, மம்தானியை பார்த்து கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர் எனவும் காட்டமாக கூறியிருந்தார் டிரம்ப். டிரம்ப் ஒரு ஃபாசிஸ்ட்டா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு டிரம்ப் முன்பாகவே வைத்து ஆம் என பதிலளித்தார் மம்தானி. இருப்பினும், மம்தானி வெற்றி பெற்றிருப்பது கவனிக்க வைத்துஉள்ளது. இதற்கு மம்தானி கொடுத்த வாக்குறுதிகள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இலவச பேருந்து, இலவசமாக குழந்தைகளுக்கு சிகிச்சை, வாடகை தொகையை உயர்த்துவதை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது மாதிரியான வாக்குறுதிகளை கொடுத்த மம்தானி, அதனை எப்படி நிறை வேற்றப் போகிறார் என்பது ஒரு பக்கம் இருக்க, டிரம்பின் நெருக்கடியை எப்படி சமாளிக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கிலும் கூட இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள் முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறது.இது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க நகரமான நியூயார்க்கின் கட்டுப்பாடு தற்போது மம்தானி கை வசம் வந்திருக்கிறது. நியூயார்க்கின் உட்கட்டமைப்பு தொடங்கி காவல்துறை வரை எல்லாமே மம்தானியின் அதிகார வரம்புக்கு கீழ் தான் வருகிறது. இது தவிர்த்து, சுமார் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் நியூயார்க் மேயரிடம் இருக்கிறது. நியூயார்க் நகரில் வசிக்கும் 90 லட்சம் மக்களுக்கான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பும் மம்தானியிடம் உள்ளது. இதன் மூலம் டிரம்புக்கு தலைவலி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.வானளாவிய அதிகாரம் கொண்ட மேயர் பதவி மூலம், டிரம்ப் வெளியிடும் அறிவிப்புக்கு எதிராக நியூயார்க் நகர அளவில் மம்தானியால் மாற்றத்தை கொண்டு வர முடியும். மேலும், டிரம்ப் அதிபர் ஆனதில் இருந்தே குடியேறிகளை மோசமாக நடத்தும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிர் மாறாக புலம்பெயர்ந்த சமூகங்களை பாதுகாப்பதாக மம்தானி சபதம் செய்திருக்கிறார். அந்த வகையில், டிரம்பின் உத்தரவுக்கு எதிராக நியூயார்க் நகர மேயர் அதிகாரத்தை வைத்து செயலாற்ற முடியும் என்பதால், வருங்காலத்தில் இருவருக்கும் இடையே பனிப்போர் உச்சமாகலாம் என சொல்லப்படுகிறது. நியூயார்க் நகர அளவில் தனக்கு இருக்கும் உள்ளூர் அதிகாரத்தை தேசிய அளவிலான செல்வாக்கு சக்தியாக மம்தானி மாற்றும் பட்சத்தில் டிரம்புக்கு சவாலாகவே இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.