பாஜக மூத்த தலைவரும், திடீர் நடிகருமான எச்.ராஜா நடிப்பில் வெளியான கந்தன் மலை திரைப்படம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்களின் பார்வையில் கந்தன் மலை என்ற தலைப்பில் இந்த செய்தித் தொகுப்பை கண்டுகளிக்கலாம்.நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என பாரதி புதுமைப் பெண்களை எப்படி விளித்தாரோ, அதுபோல் எச்.ராஜாவின் கந்தன் மலை படத்தை ஒட்டாத மீசை, பொருந்தாத வாயசைவு, செல்ஃப் எடுக்காத காமெடி என வர்ணிக்கலாம் என்கின்றனர் மீம் கிரியேட்டர்ஸ்.தனக்கு பின்னால் அரசியலுக்கு வந்தவர்கள், தன்னால் அரசியலில் அடையாளம் பெற்றவர்கள் என பாஜகவில் பலரும் எச்.ராஜாவை பின்னுக்கு தள்ளி மத்திய அமைச்சர், ஆளுநர் இவ்வளவு ஏன் குடியரசுத் துணைத் தலைவர் வரை கூட ஆகிவிட்டனர். ஆனால், அவரோ முன்னாள் எம்.எல்.ஏ என்ற ஒற்றை பட்டத்தை தாங்கி பாஜகவில் பரிதாப நிலையில் இருப்பது தான் அவரது ஆதரவாளர்களின் தீராத ஆதங்கமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், அரசியலில் திடீர் திருப்பமாக யாரும் எதிர்பாராத வகையில் எச்.ராஜா, சினிமா ஹீரோவாக குதித்து அதிர்ச்சியூட்டினார். பொதுவாக, திரைத்துறையில் கொடிகட்டி பறந்த உச்ச நடிகர்களுக்கு வயதான காலத்திலும் மார்க்கெட் போன நேரத்திலும் தான் அரசியல் ஆசை துளிர்விடும். சிலர் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு அறிமுகமாகி சாதித்ததும் உண்டு. ஆனால், தலைகீழாக தான் குதிப்பேன் என்பதை போல் எச்.ராஜா அரசியலில் இருந்து திரைத்துறைக்கு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை மையப்படுத்தி எச்.ராஜா ஹீரோவாக நடித்த கந்தன் மலை படம் வெளியாகி இருக்கிறது.படத்தை தியேட்டரில் வெளியிட்டால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி சுனாமி போன்ற அசம்பாவிதம் நிகழலாம் என கணித்த படக்குழு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, யூட்யூபில் வெளியிட்டு பல உயிர்களை காப்பாற்றியிருப்பதாக திரை விமர்சகர்கள் கலாய்த்து வருகின்றனர். பொதுவாக, சினி உலகில் படம் வெளியான மறுநாள் முதல் நாள் வசூல் என கோடிகளை குறிப்பிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதல்முறையாக கந்தன் மலை படக்குழு யூட்யூப் வியூஸை குறிப்பிட்டு படம் ஹிட் அடித்து வருவதாக சிலாகித்து வருவது சிரிப்பையே ஏற்படுத்தியுள்ளது.கந்தன் மலை படத்தை உணர்வுப்பூர்வமாக பார்த்தவர்களை விட அதனை கலாய்க்கும் நோக்கோடும், கலகலப்பான கமெண்ட்ஸை படிப்பதற்காகவுமே படத்தை பார்த்ததாக இணையத்தில் விமர்சகர்கள் ஓட்டி வருகின்றனர். படத்தில் வரும் கதாபாத்திரத்தில் எச்.ராஜா தான் ஹைலைட்டே... அரை தூக்கத்தில் ஒட்டாத மீசையுடன் போராடிய ராஜா, ப்ரஸ்மீட்டில் பொங்கும் போது கூட யு ஆர் ஆன்டி இந்தியன் என அனல்தெறிக்க பேசியிருப்பார். ஆனால் படத்திலோ அனல் பறக்கவேண்டிய அரிவாள் டயலாக்கை கூட பாயிண்ட் 5 ஸ்லோ மோஷனில் பேசி, கலகலப்பை ஏற்படுத்தியதாக பலரும் கூறுகின்றனர்.குறிப்பிட்ட ஒரு மதத்தினரை உணர்ச்சி பெருக்கில் பொங்கி எழவைக்க நினைத்து பார்த்து பார்த்து இந்த படத்தை செதுக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், அர்ஜுன் நடிச்ச மருதமலை காமெடி படத்தை விட எச் ராஜா நடிச்ச கந்தன் மலை காமெடி அதிகமாக இருக்கு என, சொல்லுமளவுக்கு படக்குழுவினரை தெருவில் நிறுத்தியிருக்கிறது இந்த கதை என திரைவிமர்சகர்கள் கூறி வருகின்றனர்.மீளாத மன உளைச்சல், தீராத குடும்ப பிரச்னை, ஓயாத வேலைப்பளு என சிரமப்படுபவர்கள் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி கந்தன் மலை படத்தை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் அதில் இருக்கும் கமெண்ட்ஸ்களை படித்தாலே போதும் மனம் லேசாகி துன்பமெல்லாம் சிட்டாய் பறந்துவிடும் என்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள். அவதாருக்கும், கந்தன் மலை படத்துக்குமே போட்டி என உசுப்பேற்றி உசுப்பேற்றி ஒரு குறிப்பிட்ட சில கட்சிகளையும், மதத்தையும் மையப்படுத்தி முழுக்க முழுக்க வன்மத்தை கக்கி, படம் எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடிவரும் நிலையில், அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி, எச்.ராஜா என்றைக்குமே எங்களுக்கு கண்டண்ட் கொடுத்து வாழவைக்கும் தெய்வம் அவர், என மீம்ஸ் கிரியேட்டர்கள் அவரைக் கொண்டாடிட வருகின்றனர்.