கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் அடங்கிய குழுவை உருவாக்கியுள்ள விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகம், அந்த மக்கள் பாதுகாப்பு படை மூலம் தொண்டர் அணியினருக்கு பயிற்சி அளித்ததோடு, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தத்தளித்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது அடுத்தடுத்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இதனையடுத்து, ஒரு மாதத்திற்கும் மேலாக சைலன்ட் மோடில் இருந்த தவெக, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் இருந்து சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதல் கூறிய பிறகு, அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக இறங்கி, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. ஆறுதல் கூறும் நிகழ்ச்சி, முடிந்த அடுத்த நாள் முதலே நிர்வாகக் குழு அமைத்து உத்தரவிட்டதோடு, அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார் விஜய்.இந்நிலையில், விஜய் பிரச்சாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ஓய்வு பெற்ற டிஎஸ்பி-க்களான ஷபியுல்லா, சிவலிங்கம், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் அசோகன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். தவெக உருவாக்கிய இந்த மக்கள் பாதுகாப்பு படையை கொண்டு, அக்கட்சியின் தொண்டர் அணியினருக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர் அணியினருக்கு, பிரச்சார நேரங்களில் கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வழங்கினர்.தொகுதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் வீதம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 468 பேர் கொண்ட தொண்டரணியை தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியுள்ள நிலையில், பிரச்சாரத்தின்போது விஜய்யை பாதுகாக்கவும், மக்களை பாதுகாக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாட்களில் தொண்டரணியில் சில நிர்வாகிகள் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.வரும் நாட்களில் விஜய் மேற்கொள்ளவுள்ள பிரச்சார கூட்டங்களில் இந்த புதிய அணிகளின் செயல்பாடுகளும், பங்களிப்பும் எந்த அளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இதையும் பாருங்கள் - மக்களை பாதுகாக்க Ex போலீஸ் குழு, தவெக தொண்டர்களுக்கு வழிகாட்டல், விஜய் அடுத்தடுத்து அதிரடி