டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.விமானம் மூலம், இன்று, இபிஎஸ் டில்லி சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் சென்றனர். விமான நிலையத்தில் தம்பிதுரை, இன்பதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்பிக்கள் அவரை வரவேற்றனர். இன்று காலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை, இபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்நிலையில், இன்று இரவு டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். அதன் பிறகு, நிர்வாகிகள் வெளியேறிய நிலையில், அமித்ஷா உடன் இபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.மேலும், கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணி கட்சிகள் இணைந்து மக்களை சந்திப்பது, இதர கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், விஜய் கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு உள்ளிட்டவை குறித்தும் பேசியிருப்பதாக தெரிகிறது."முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியை பாஜக தான் காப்பாற்றியது" என, இபிஎஸ் கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நடந்த இந்த ஒரு மணி நேர சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.இதையும் பாருங்கள்: ஒரு மணி நேரம் பேச்சு, என்ன பேசினார் இபிஎஸ்? | Edappadi Palanisamy meets Amithshah